Wednesday, June 27, 2012

காபியால் போகும் மறதி

வயசு ஆயிடுச்சுல... அதான் மறந்துட்டேன்'.. என பெரியவர்கள் கூற கேட்டிருப்போம். காபியை குறிப்பிட்ட அளவு தினமும் குடித்து வந்தால் மறதிக்கு ஒரு காரணமான"அல்சீமர்' எனும் நோய் வராது என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

"அல்சீமர்':வயதாக ஆக மூளையின் செயல்பாடும், நினைவுத்திறனும் மங்கும். இது "டிமன்சியா' (மறதிநோய்) எனப்படும். நாளடைவில் இது வளர்ச்சி அடைந்து, முழுமையான அறிவாற்றல் இழப்பை ஏற்படும். இது, "அல்சீமர்' எனப்படும். 1906ம் ஆண்டு ஜெர்மனைச் சேர்ந்த மனநல மருத்துவரான அலாய்ஸ் அல்சீமர் இதைக் கண்டுபிடித்தார். 60 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் இந்நோய் அதிகமாக காணப்படுகிறது. 2006ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, 27 மில்லியன் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2050க்குள் இது 100 மில்லியனை தொடும் எனவும் தெரிகிறது.

காபியால் போகும் மறதி:அமெரிக்காவில் உள்ள சவுத் புளோரிடா மற்றும் மியாமி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள், காபியில் உள்ள "காபின்' மூலக்கூறுகளை ஆராய்ந்தனர். "அல்சீமர்' நோயால் பாதிக்கப்பட்ட எலிக்கு தினமும் குறிப்பிட்ட அளவு காபி கொடுத்து செய்த ஆய்வின் முடிவில், அல்சீமர் நோய் குணமாவது தெரிந்தது. பின், 60 வயதிற்கு மேற்பட்ட 125 பேரிடம் இதே ஆராய்ச்சியை மேற்கொண்டனர். அவர்களுக்கு தினமும் 3 கப் காபி கொடுக்கப்பட்டது. இறுதியில், அல்சீமரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயின் தாக்கம் குறைந்திருப்பது தெரிந்தது. மறதி ஏற்படுவதாக தெரிந்தால் வயதானவர்கள், தினமும் காபி எடுத்துக் கொள்ளலாம்.