Monday, December 30, 2013

பள்ளி விடுமுறை நினைவுகள்

என் பள்ளி பருவத்தின் கால்/அரை /முழு ஆண்டு தேர்வுக்கு பிறகு வரும்
பள்ளி விடுமுறை நாட்களின் நினைவுகள்.

25 ஆண்டுகளுக்கு பிறகு நினைவில் இருப்பது,

 என் விடுமுறை நாட்களை நான் விரும்பி கழிக்கும் இடத்தின் பெயர்  தமிழக மாநிலத்தின்  தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட இடத்தின் பெயர் கல்மடுகு. இந்த இடத்தை கிராமம் என்று கூட கூற இயலாது. ஏன்  எனில் இந்த இடத்தை சுற்றி இருந்த வீடுகளின் எண்ணிக்கை 5 மட்டுமே. இந்த வீடுகளுக்கு இடையே இருந்த இடைவெளி குறைந்தது 500 மீட்டர் இருக்கும். ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டில் உள்ளவரை அவசரத்திற்கு கூட அழைக்க இயலாது. பென்னாகரம் பேரூராட்சியில் இருந்து மேற்கு திசை ( ஓகேனக்கல் காட்டின் அடிவாரத்தை) நோக்கி ஒத்தை அடி பாதை வழியாக நடந்தால் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. 

இந்த இடத்திற்கு கல்மடுகு என்று பெயர் வர காரணம், இந்த இடத்தில் பெரிய பாறை ஒன்று உள்ளது. இந்த பாறையின் மத்திய பக்கவாட்டில் ஒரு பெரிய ஆழமான குகை போன்று இருக்கும். இதனுள் மனிதன் நுழைய முடியாத அளவுக்கு குறுகியதாக இருக்கும்.  இந்த குகை போன்ற இடுக்குகளில் இருந்து தூய்மையான நீர் வந்து கொண்டே இருக்கும். இந்த நீரே இந்த 5 வீடுகளுக்கு குடிநீராக பயன்படுத்தப்பட்டது. இந்த கல்லில் இருந்து மடுகு போன்று நீர் வந்துகொண்டே இருப்பதால் இந்த இடத்திற்கு கல்மடுகு என்ற பெயர் வந்ததாக எனது தாத்தா கூறுவார். இந்த நீர் நிலையானது ஓரிடத்தில் நின்றுவிடாமல் தொடர்ந்தோடி ஒரு சிறிய ஆறு போலிருக்கும். இந்த சிறிய நீர்நிலை, அங்குள்ள ஆடு, மாடுகளுக்கும் தாகம் தீர்க்கும் இடமாகும்.

அணைத்து வீடுகளிலும் மின்சார இணைப்பு இருக்காது. ஆனால் ஓரிரு வீட்டாரின் தோட்டத்தில் உள்ள கிணறுகளுக்கு மின்சார மோட்டார் இணைப்பு உண்டு. அணைத்து வீடுகளும் ஓடு அல்லது கூரை வீடுகள்தான் இருக்கும். நிலங்கள் புஞ்சை நிலங்கள் என்பதால் நீர்பாசன விவசாயம் போன்று இருக்காது.  சோளம், ஆமணுக்கு, நிலகடலை மற்றும் அரிதாக நெற்பயிர் பயிரடபட்டிருக்கும். ஆங்காங்கே நிறைய பாறைகள், மேடு பள்ளமான பகுதியாகத்தான் இருக்கும். சீரான சமவெளி பகுதியாக இருக்காது.

 அந்த வீட்டில் எனது அம்மாவின்  சித்தப்பா, சித்தி மற்றும் அவரது இரண்டு ஆண், இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தனர். அதில் மூத்தவர் மட்டும் கல்லூரியில் மற்றவர் அனைவரும்
உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளிலும், அந்த சமயம்
 நான் ஆரம்ப பள்ளிகளில் படித்து கொண்டிருந்தேன்.

அந்த வீடு, ஒரு படுக்கை அறை, ஒரு சமையல் அறை மற்றும் ஒரு முற்றம் போன்ற இடம் மட்டுமே இருக்கும். ஆண்கள் முற்றத்திலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் படுக்கை அறையிலும் உறங்குவர்.

அந்த எனது தாத்தா வீட்டில் குறைந்தது ஆடுகள், மாடுகள், புறாக்கள், நாய்கள், கோழிகள், முயல் மற்றும் பூனை ஆகியவை இருக்கும். பூனை கூட கோழி மற்றும் முயல்களை எதுவும் செய்வதில்லை. அவ்வாறு வளர்க்கப்பட்டு இருக்கும்.

வீட்டை சுற்றி சுமார் 100 மீட்டர் தூரம் வரையில் எந்த சப்தம் கேட்டாலும் நாய்கள் அந்த திசை நோக்கி குரைத்தவாறு  பாய்ந்து ஓடும். வீட்டில் உள்ளவர்கள் யாரேனும் சென்று பார்த்து யாரேனும் வந்தால் அவர்களை அழைத்து வரவேண்டும். இல்லையேல் நாய்களை மீறி வரமுடியாது.

ஒவ்வொரு பள்ளி விடுமுறை நாட்களிலும் முதல் நாள் எனது அம்மாவின் பிறந்த ஊரான போடுர் என்ற கிராமத்திற்கு தான் முதலில் செல்வோம். இந்த இடம் பென்னாகரம் பேரூராட்சிக்கு அருகில் உள்ள இடம். இங்கு அணைத்து அடிப்படை வசதிகளும் உண்டு. மின்சாரம், பேருந்து, சாலை வசதி, வாகன வசதி, தொலைகாட்சி, பள்ளி அணைத்து வசதிகளும் உண்டு. ஆனால் இந்த இடம் எனக்கு அவ்வளவாக பிடிக்காது.

ஒவ்வொரு முறையும் முதல் நாளே என்னை கல்மடுகிற்கு அழைத்து செல்லும்படி நான் அடம்பிடிப்பேன். தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் கல்மடுகிளிரிந்து எனது மாமா அல்லது எனது தாத்தா பால் கொண்டு வந்து ஊற்றி செல்வார்கள். அவர்களுடன் என்னை அழைத்து செல்லும்படி அடம் பிடிப்பேன். பலமுறை என்னை ஏமாற்றி விட்டு சென்றுவிடுவார்கள்.  நானும் விடாமல் பலமுறை யாருக்கும் தெரியாமல் நானே சென்றுவிடுவேன். நான் ஏற்கனவே கூறியது போல் அது ஒற்றை வழிதடம். அந்த வழியில் வரிசையாக இரண்டு கிணறுகள் இருக்கும். சிறிது கால் தவறினால் கூட மரணம் நிச்சயம்.  நீச்சல் தெரிந்தவர்கள் கூட நிறையபேர் அதில் தவறி விழுந்து இறந்து விட்டார்கள். காரணம் பாறை மற்றும் நிறைய பாம்புகளும் இருக்கும்.

அந்த கிணறுகளை தாண்டி சென்றால் வலது புறத்தில் நடுக்காடு மற்றும் மயானம் இருக்கும். இந்த வழி நெடுங்கிலும் எல்லா இடத்திலும் பாம்புகள் இருபதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. அதை தாண்டி சென்றால்  அடர்ந்த சோளகாடு மற்றும் ஆமானுக்கு செடிகளாகதான் இருக்கும்.  சுமார் ஒரு மையில் தொலைவிற்கு பயணத்தை முடித்தால் ஒருவீடு தென்படும். அந்த வீட்டிற்கு பின்புறம் பெரிய பள்ளத்தாக்கு பகுதி போல காணப்படும்.  அங்கிருந்து பின்புறமாக பார்த்தல் எங்க தாத்தா வீடு தெரியும். ஆனால் இன்னும் ஒரு மையில் தூரம் நடக்கவேண்டும். ஆனால் பயத்தை குறைத்து கொள்ளலாம்.

நான் முதல் முறையாக யாருக்கும் தெரியாமல் போடுரிலிருந்து கல்மடுகிற்கு எனக்கு ஆறு வயதாக இருக்கும் போதுதான் சென்றேன். நான் நடந்து சென்றேன் என்பதை விட ஓடினேன் என்பதே சரியாக இருக்கும். முதலில் மெதுவாக யாருக்கும் சந்தேகம் வராமல் நடப்பேன். பின் யாரும் இல்லாத இடத்தை அடைந்தவுடன் ஓட ஆரம்பிப்பேன். பயத்தினால் பாதியும், யாரும் பார்க்க கூடாது என்பதற்காக பாதியும் ஓடுவேன். கிணறுகள் இருக்கும் இடம் வரை ஓட்டமும் பின் பத்திரமான நடை கிணறை தாண்டும் வரையும். பிறகு மயானத்தை தாண்டும் வரை ஓட்டமும். இவ்வாறாக நடையும், ஓட்டமும் மாறி மாறியும். சில இடங்களில் பாம்புகளை பார்த்தவுடம் அலறலுடன் ஓட்டமும். கீழே விழுந்து எழுந்து ஓடுவதும் உண்டு. இறுதியாக வீட்டை நெருங்கியவுடன் மெதுவாக நடக்க ஆரம்பிப்பேன். காரணம் தனியாக வந்ததிற்காக திட்டுவார்கள், ஓடினால் நாய் கடித்துவிடும். மெதுவாக நடந்தால் நாய் ஒன்றும் செய்யாது என்ற பொதுஅறிவு.


இந்த பயண நேரத்திற்குள் என்னை போடுரில் தேட ஆரம்பித்திருபார்கள். நான் சென்றது மதிய உணவிற்கு பிறகு என்பதால் மாலை பால் கொண்டுசெல்பவர்கள் அவசர அவசரமாக நான்கு மணிக்கு எல்லாம் கொண்டு செல்பார்கள் நான் இங்கு வந்த தகவலை சொல்ல. சில நாட்களில் எனது மாமாக்கள் என்னை தேடிவந்துவிடுவார்கள். என்னை யாரும் அடித்த ஞ்பகம் அவ்வளவாக இல்லை ஆனால் நிறைய திட்டுவார்கள். சந்தோசம் என்னவென்றால் திருப்பி அழைத்து செல்லமாட்டார்கள் திரும்பியும் இப்படிதான் வருவேனென்று. சில நாட்கள் என் அம்மா அழுவதாக கூறி என் மனதை மாற்றி அழைத்து சென்றுவிடுவார்கள். ஏனெனில் வேறெந்த காரணத்தை கூறியும் என் மனதை மாற்ற முடியாது. அந்த மனமாற்றம் கூட ஒரு நாள் மட்டுமே. மறுநாள் அழைத்து வராவிட்டால் மீண்டும் ஓடுவேன்.

கல்மடுகுவில் என் தாத்தா வீட்டிற்கு முன்புறமாக நான்கு பனை மரங்கள் துவரகம் போலும் , இடப்புறமாக சீதா மரங்கள் மூன்றும் இருக்கும். வீட்டில் இருந்து முன்புறமாக சுமார் 30 மீட்டர் தொலைவில் ஒரு சிறிய கிணறு ஒன்று இருக்கும். அந்த கிணற்றிற்கு 5 அல்லது 6 சிறிய படிகட்டுகள் மட்டுமே இருக்கும். அந்த கிணறு எப்பொழுதும் நிறைந்தே இருக்கும். சாதாரணமாக குனிந்தே நீரை அள்ளலாம். அந்த கிணற்றின் நீளம், அகலம் 5*5 மட்டுமே இருக்கும். அவ்வளவு சிறிய கிணற்றை நான் வேறெங்கும் கண்டதில்லை. அந்த கிணற்றை சுற்றிலும் சுமார் 20 தென்னை மரங்களும், 7 புளிய மரங்களும், 6 இளவம் பஞ்சு மரங்களும், 4 வகையான மாமரங்களும், நாட்டு நெல்லிக்கனி மரமும் மற்றும் 5 கொடிக்காய் மரங்களும் இருக்கும். இந்த தோட்டத்தில் ஆங்காங்கே கயிறினால் கட்டப்பட்டு ஊஞ்சல்கள் இருக்கும். இங்கு வைக்கோல் போர்  ஒன்று மாடுகளுக்கு வைப்பதற்காக இருக்கும். இந்த இடத்தில தான் நான் அதிக பாம்புகளை கண்டிருக்கிறேன். இந்த தோட்டத்தை சுற்றிலும் முள்வேலி அமைக்கபட்டிருக்கும்.  இந்த முள்வேலியை ஒட்டி ஒரு வழிதடம் ஓகேனக்கல் காட்டிற்கு செல்லும்.

தினமும் காலை எழுந்தவுடன் வேப்பமர குச்சியினால் பல்துலக்கிய பிறகு 2 டம்ளர் சோள கூழ் குடிப்பேன். பிறகு மாடுகளை கயிற்றில் இருந்து அவிழ்த்து விட்டு நானும் என் மாமாவும் காட்டுக்குள் ஓட்டி செல்லவேண்டும். கன்றுகள் மட்டும் மாட்டு தொழுவத்தில் இருக்கும். அதற்காக சுமார் 2 மையில் தூரம் ஓட்டி செல்லவேண்டும். பிறகு வீடு திரும்பும் வழியில் நீரோடையில் அல்லது எங்கேனும் கிணற்றில் குளித்து விடுவோம். பிறகு காலை உணவை உண்போம். அது கலி அல்லது சாதம் தான்.  பிறகு புறா, கோழி, நாய், முயல் மற்றும் பூனைக்கு உணவு வைத்துவிட்டு ஆடுகளை இழுத்துக்கொண்டு எனது சித்திகளுடன் தோட்டத்திற்கு செல்வோம். தோட்டத்தில் இருக்கும் செடிகளுக்கு நீர் ஊற்றுவேன். ஊஞ்சலில் விளையாடுவேன். மரத்தில் இருந்து விழுந்த தேங்காய், இளவம் பஞ்சு காய்கள், புளியம் பழம், நெல்லிக்காய், கொடிக்காய் மற்றும் சீதாபழம் என அனைத்தையும் கூடையில் சேகரிக்க வேண்டும். இதற்கு சுமார் 2 மணி நேரம் ஆகும். பிறகு ஏதேனும் ஒரு மரத்தின் நிழலில் பாயில் அமர்ந்து ஏதேனும் புத்தகத்தை படிப்போம். தூக்கம் வந்தால் அங்கேயே நன்றாக தூங்கிவிடுவோம்.

கோழிகள் பாம்புகளை கண்டால் ஒருவிதமான வித்தியாசமான ஒலியை ஒன்றாக உண்டாக்கும். அப்படி எழுப்பினால் அங்கு சென்று உற்று தேடினால் நிச்சயம் அந்தஇடத்தில் பாம்பு இருக்கும். இது 100% நான் கண்ட உண்மை. அதை கண்டுபிடுத்து கொல்ல வேண்டும். பாம்புகளை கொல்வது அவ்வளவு எளிதல்ல. பல நாட்கள் பாம்புகள் தப்பிவிடும். அது நாகம், கருநாகமாக இருந்தால் அதை விரட்டவே முயற்சிப்போம். அது இருக்கும் இடத்தை பொறுத்து.

பிறகு மதிய உணவை முடித்திவிட்டு வெயில் நேரத்தில் ஒய்வு எடுப்போம். பிறகு நிலங்களை சுற்றி வருவோம்.

சுமார் 4 மணியளவில் காட்டில் விட்டு வந்த மாடுகள் வீட்டிற்கு வந்துவிடும். அவற்றிற்கு தண்ணீர் காட்டி, வைக்கோல் வைத்து கயிற்றில் கட்டி விடவேண்டும். பிறகு பால் கறந்து காபி குடித்த பின். யாரேனும் ஒருவர் பாலை கொண்டு செல்வார். சென்றவர் வந்தவுடன் சுமார் 7 மணியளவில் இரவு உணவு முடிந்து விடும். பிறகு அனைவரும் அமர்ந்து சிறிது நேரம் பேசுவோம். பிறகு உறங்க சென்றுவிடுவோம்.

வெள்ளி, சனி கிழமைகளை தவிர எந்தனாளாக இருந்தாலும் நினைத்தால் கோழிகளை விரட்டி பிடித்து. நெருப்பில் சுட்டு எரித்து இறகுகளை நீக்கி பக்குவமாக சுத்தம் செய்து சமைத்து சாப்பிடுவோம். நான் இங்கு தான் கோழிகளை வெட்டி சுத்தம் செய்வதை கற்றுக்கொண்டேன்.

பல நாட்கள் இரவு நேரங்களில் வீடு கூரை மேல் பாம்புகளை கண்டு அடித்திருக்கிறோம். நாண்டர் விளக்குகளின் வெளிச்சத்தில் தான் உண்பதும், உறங்குவதும். நான் கயிற்று கட்டிலில் வீட்டின் வெளியே படுத்து உறங்குவதையே விரும்புவேன்.

இந்த இயற்கையான அற்புதமான எனக்கு பிடித்த வாழ்க்கையை எனது 15 வயது வரை அனுபவித்தேன். அதன் பிறகு பல பொருளாதார பிரச்சினைகளால் அந்த வீடு மற்றும் நிலங்களை விற்றுவிட்டார்கள்.
என் வாழ்க்கையில் நான் மீண்டும் வேண்டுபவை இந்த வாழ்க்கை தான்.