Tuesday, February 18, 2014

வியாஷ் சரண்ஜித் ராஜ் 2ம் ஆண்டு பிறந்தநாள் 8-11-2013 - ஆந்திரா பிரதேசம் மாநிலம்

எங்கள் மகன் வியாஷ் சரண்ஜித் ராஜ் யின் இரண்டாம் ஆண்டு பிறந்த நாளுக்கு (8-11-2013) நாங்கள் சென்ற இடம் ஆந்திரா மாநிலத்தில் உள்ள பத்ராசலம், பர்ணசால மற்றும் பாப்பிகொண்டலு என்ற இடங்களுக்கு சென்றோம். அப்போது நான் ஹைதராபாத்தில் உள்ள IGATE கம்பெனியில் வேலை செய்துகொண்டிருதேன். இந்த இடங்கள் ஹைதராபாத்தில் இருந்து சுமார் 350 கி.மீ. தொலைவில் உள்ளன. பத்ராசலம் என்ற இடத்தில சீதாராமர் கோயில் இந்தியாவின் இரண்டாவது பெரிய புண்ணிய நதியான கோதாவரி நதியின் கரையில் உள்ளது. இந்த கோயில் கி. பி. 1674 ம் ஆண்டு கஞ்சர்ல கோபண்ணா ( பக்த ராமதாஸ்) என்பவரால் அன்று ஆண்ட சுல்தான் அரசாங்கத்து பணத்தை கொண்டு கட்டப்பட்டது. இதனால் அவர் சிறை வாசம் சென்றார். அந்த பணத்தை ராமர் அதிசயத்தால் திரும்ப செலுத்தி அவரை மீட்டார் என்பது புராணம். பின்னர் அவர் ராமர் மீது கொண்ட பற்றால் பல ராம கீர்த்தனைகள் எழுதினார். இந்த கோயிலின் உள்ளே பின்புறம் ஒரு பாறையை சுற்றி ஸ்ரீ ராமதாசுவின் கோயில் உள்ளது. அவர் ஸ்ரீ ராமா ஸ்ரீ ராமா என்றவாறு தியானத்தில் ஆழ்ந்தவாறு பாறையாக மாறினார் என்பது அங்குள்ளவர்கள் கூறுபவை. இவ்வாறு இந்த கோயிலுக்கு பல சிறப்புகள் சொல்லபடுகிறது. இந்த ஊரில் அபய ஆஞ்சநேய கோயில் ஒன்றும் உள்ளது.

                நான், என் மனைவி மற்றும் என் மகன் மூவரும் 06-11-2013 அன்று இரவு 9.30 மணிக்கு நிசாம்பெட் கிராஸ் ரோட்ஸ், ஹைதராபாத்தில் இருந்து பேருந்து மூலமாக பத்ராசலம் புறப்பட்டு 07-11-2013 விடியற் காலை 5.30 மணிக்கு சென்றடைதோம். இந்த நாள் (07-11-2007 ) எனது தாத்தா ராஜா கோபால் நாயுடுவின் 6ம் ஆண்டு நினைவுதினம். இதை நினைவு படுத்த வேண்டும், என் மனைவி கருதெரித்த செய்தி கேட்ட முதல் நாளே நான் என் மனைவியிடம், என் தாத்தாதான் எனக்கு மகனாக பிறக்க போகிறார் என்று கூறினேன். அவளோ முட்டாள் தனமாக பேசவேண்டாம் என்றாள். அதே போல் அவன் 7 அல்லது 8 ம் தேதிதான் பிறப்பான் என்றும் கூறினேன். ஆனால் அவள் 21-11-2011 ம் தேதியை doctor's expected date of delivery என்று காட்டினாள். நான் அனைவரிடமும் மேற்கண்டது போல் சொல்ல ஆரம்பித்தேன். அனைவரும் 15 நாட்கள் முன்பே பிறக்க வாய்ப்பில்லை என்றனர். ஆனால் நான் எதிர் பார்த்ததே நடந்தது. இதனால் அவன் பெயர் ராஜ் என முடியவேண்டும் என் முடிவு செய்தேன். அது மட்டும் இல்லாமல் அவன் பெயர் "வி" என்ற எழுத்தில் தான் தொடங்கவேண்டும் என்று பிறப்பதற்கு முன்பே முடிவுசெய்தேன்.

              பெயரின் காரணம்:
வியாஷ் ---விஜய் அஸ்வினி மற்றும் (வியாசர் - முற்றும் அறிந்த மாமுனிவர், மகாபாரதத்தில் பாண்டவர் மற்றும் கௌரவர்களின் தாத்தா).
சரண்ஜித் -- அவனது ராசி படி அவனது பெயரில் "cha" உச்சரிப்பு இருக்க வேண்டும். சரண்ஜித் என்றால் "கடவுளை வென்றவன்" என்று பொருள்.
ராஜ் --- எனது தாத்தா "ராஜா கோபால் நாயுடு".


               பாத்ராச்சலத்தில் கோயில் அருகே ஒரு விடுதியில் தங்கி குளித்து புறப்பட தயார் ஆனோம். ஆனால் அன்று கோயிலுக்கு செல்ல விரும்பவில்லை. அடுத்த நாள் என்மகனின் பிறந்த நாள் தான் அந்த கோயிலுக்கு செல்லவேண்டும் என நினைத்தோம். எனவே அங்கிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் பாப்பிகொண்டலு பகுதிக்கு tata ace share auto வில் காலை 8.30 மணிக்கு புறப்பட்டோம். அது அனைவரையும் ஏற்றிக்கொண்டு 9.30 மணிக்கு பாத்ராச்சலத்தில் இருந்து புறப்பட்டது. இந்த இடத்தை அடைய அடர்த்தியான காட்டுக்குள்ளே சென்றடைய வேண்டும். சுமார் 11 மணிக்கு பாப்பிகொண்டலு படகு சவாரி ஆரம்பிக்கும் இடத்தை அடைந்தோம்.

              பாபிகொண்டலு என்பது பசுமையான பெரிய பல மலைகளுக்கு இடையே புண்ணிய நீண்ட ஆளமான நதியான கோதாவரி செல்லும் அழகை கண்டு ரசிக்க உகந்த இடம். இங்கு சுமார் 30 கி.மீ. சுற்றளவில் cell phone signal கூட கிடைக்காது. சுமார் 11.30 மணியளவில் எங்கள் படகு சவாரி தொடங்கியது. இந்த படகில்  2 அடுக்குகள் உள்ளன. முதல் அடுக்கின் பின்புறம் சமையல் கூடம் இருந்தது. காலை மற்றும் மதிய உணவு தயார் ஆகிக்கொண்டு இருந்தது. சுமார் 70 பேர் இருந்தனர். சுடச்சுட காலை சிற்றுண்டி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது. சாதரணமாக நதியின் ஆளம் கரை மட்டத்தில் இருந்து உள்ளே செல்ல செல்ல அதிகரிக்கும். ஆனால் இந்த கோதாவரி நதி கரை மட்டத்தில் இருந்தே மிகவும் ஆளமானது. எவ்வளவு ஆளமானது என்று அங்குள்ளவர்களுக்கே தெரியாது. நீரின் வேகமும் அதிகமாகதான் இருக்கும். ஆனால் பார்பதற்கு அமைதியாகவே இருக்கும். இதில் விழுந்தால் நன்கு நீச்சல் பயிற்சி பெற்றவர்கள் கூட தப்பிக்க முடியாது என்று சொல்கிறார்கள்.

            பாப்பிகொண்டலுவின் அழகை ரசித்தவாறு பயணித்தோம். இந்த பயணத்தில் கரையோரங்களில் உள்ள கிராமங்களை பற்றியும் அதன் சிறப்பு மற்றும் வரலாறு குறித்து ஒலி பெருக்கியில் அறிவித்துகொண்டே பயணம் தொடரும். அங்குள்ள அணைத்து கிராமங்களிலும் மின் இணைப்பு இல்லை, சாலைகள் இல்லை, மருத்துவ வசதி இல்லை. சிலர் சூரிய ஒளியின் மூலம் வரும் மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர்.  அங்கு படகு போக்குவரத்தே பிரதானமானது.  பிறகு ஒரு கரையோரம் நிறுத்தபட்டது. அங்கு ஒரு சிவன் கோயில் உள்ளது. சீதை ஒரு சிவா பக்தை என்பதற்கு எடுத்துகாட்டு. இந்த கோயில் நிர்வாகம் செய்வது மங்கைகள் என்று அழைக்கப்படும் திருமணமாகத பெண்கள். இந்த கோயிலை சுற்றி நீர் ஓடைகள் இருக்கும். வருடந்தோறும் வற்றாத ஓடைகள் ஆகும். மூங்கில்களால் ஆன பொம்மைகள் இங்கு சிறப்பு.

            மறுபடியும் பயணம் தொடரும். சுமார் மதியம் 2 மணியளவில், மதிய உணவிற்காக தீவு போன்ற இடத்தில நிறுத்தப்படும். இங்கு நதியானது இரண்டாக பிரியும் இடம். சூடான மதிய உணவு பரிமாறப்படும். கரையில் அமர்ந்து உண்ணும் போது நான் மேற்கூறிய நதியின் ஆளத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம். அவசரப்பட்டு நீரியில் இறங்கினால் மூழ்கி விடுவீர்கள். விரும்பினால் இந்த இடத்தில 24 மணிநேரம் தங்குவதற்கு தலா ஒருவருக்கு 1000 ரூபாய் படகுகாரர்களால் வசுலிக்கபடும். மறுநாள் வந்து உங்களை அழைத்து செல்வர். இங்கு மூங்கில் குடில்கள் தங்குவதற்கும், அசைவ உணவுகளும் கிடைக்கும். மறுபடியம் பாபிகொண்டலுவின் அழகை ரசித்தவாறு பயணம் தொடரும். இறுதியாக தொடங்கிய இடத்தை மாலை 6 மணிக்கு வந்தடையும். பின்னர் விடுதியை அடைந்து ஒய்வு எடுத்துக்கொண்டோம்.

         பிறந்த நாள் அன்று முதலில் ஸ்ரீ  சீதா இராமர் கோயிலுக்கு சென்றோம். பிறகு லக்ஷ்மி நரசிம்மர் கோயிலுக்கு சென்றோம். பிறகு  நதிக்கரைக்கு சென்றோம். பின்னர் அபஹய ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்றோம். பிறகு  சிற்றுண்டியை முடித்துவிட்டு ஆட்டோவில் "பர்ணசலா"  விற்கு புறப்பட்டோம். சுமார் 40 நிமிட பயணத்திற்கு பிறகு பர்ணசலவை அடைந்தோம். இதுவும் வேறு ஒரு திசையில் கோதாவரி நதி கரையில் அமைந்த இடம். இவைஅனைத்தும் பலமை காலங்களில் மனிதர்கள் ஆற்றங்கரையோரங்களில் வாழ்ந்தார்கள் என்பதை கூறுகிறது.

      பர்ணசாலாவின் சிறப்பு:
             இராமரும் சீதையும் வனவாசம் இருந்தநாட்களில்  வாழ்ந்தார்கள் என்பதற்கு இங்கு நிறைய சான்றுகள் சொல்லபடுகிறது. இங்கிருந்துதான் இராவணன் சீதையை கடத்தி சென்றான். சூர்பனகை மூக்கை அறுத்த இடமும் இங்குதான் உள்ளது. இந்த இடங்களை பார்த்துவிட்டு பத்ராசலம்  வந்து அடைந்தோம். பிறகு ஹைதராபாத் திரும்பினோம்.

இந்த பதிவு வெளியிடப்படும் நாளில் தான் ஆந்திராவில் இருந்து தெலங்கானா உதயமாவதர்கான மசோதா பார்லிமெண்டில் நிறைவேற்றபட்டது.