Friday, December 30, 2011

அதிர்ஷ்ட கற்களைப் பரிசோதனை செய்யும் எளிய முறை

அதிர்ஷ்ட கற்கள் என்று சொல்லப்படுபவைகள் நவரத்தினக் கற்களே ஆகும்.  மாணிக்கம், முத்து, பவளம், மரகதம், புஷ்பராகம்,  வைரம் நீலம், கோமேதகம், வைடூயம் ஆகிய கற்களை நவக்கிரகங்களின் அம்சமாக வேதங்கள் சொல்லுகின்றன.   எனவே வேதகாலத்தில் இருந்தே கிரகங்களின் பரிகாரத்திற்காக நவரத்தினங்கள் பயன்படுத்தப்பட்டு வந்த இருப்பதை அறிய முடிகிறது.

  ரத்தினங்களைப் பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன.  அவைகளில் மிக முக்கிய சிக்கல் ரத்தினங்கள் நல்லதா, போலியானதா என்பதைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் பலரிடம் இல்லாததே ஆகும்.  இதைப் பயன்படுததி போலி ரத்தினங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.  எனவே ரத்தினங்ளைப் பரிசோதனை செய்யும் எளிய முறையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.


  மாணிக்கம் கல்லை பாலில் போட்டால் பாலில் சிவப்பு நிறம் படரவேண்டும்.  நுரையுள்ள பாலில் முத்தைப் போட்டால் அது மிதக்க வேண்டும்.  பவளம் பாலில் விழுந்தவுடன் பால் சிவப்பாக மாறவேண்டும்.  நல்ல மரகதத்தை குதிரையின் மூக்கின் அருகே கொண்டு சென்றால் அது தும்ம வேண்டும். 

  சந்தனம் அரைக்கும் கல்லின் மீது புஷ்ப ராகத்தை வைத்தால் தாமரைப் பூவின் வாசம் வரவேண்டும்.  வைரத்தின் கீழ் பகுதியின் விரல் வைத்தால் விரலில் பிம்பம் மேல்புறத்தில் தெரியக்கூடாது.  பசும்பாலில் நீலக்கல்லைப் போட்டால் பால் நீல நிறமாக மாறவேண்டும்.    

  பசும் பாலில் கோமேகத்தைப் போட்டால் பால் கோமியத்தின் வண்ணத்தைப் பெறவேண்டும்.  இருட்டில் வைடூயத்தை வைத்தால் அது பூனைக்கண் போல் ஜொலிக்க வேண்டும்.  


  அடுத்த சிக்கல் இயற்கை ரத்தினங்களை வாங்குவதா, செயற்கை ரத்தினங்கள் வாங்குவதா என்பது தான் அது.  இயற்கை ரத்தினங்கள் அணிவது தான் நியாயப்படி சரியான பரிகாரம் ஆகும். 

  ஆனால் அதன் விலை அதிகம் என்பதால் சாதாரண மனிதர்கள் வாங்க இயலாது.  அதனால் செயற்கை ரத்தினங்களை அணிந்து கொள்ளலாம். என சிலர் சொல்கிறார்கள் ஆனால் அது முழுமையான பலனை தராது  ஓரளவு பலன் தரும்.  ரத்தினக் கல் பரிகாரம் என்பது ஜாதகப்படி கிரக நிலைகள் நல்லவிதமாக அமைந்திருக்கும் நாளில் செய்வதால் தான் நல்ல பலனைத் தரும் அல்லது பலன் தராது.  தீய விளைவுகளைக் கூட ஏற்படுத்தி விடலாம்


கோடிஸ்வரனை ஆண்டி ஆக்கும் யோகம்

யோகங்கள் என்றவுடன் அதிர்ஷ்டமான  அமைப்பு என்று கருதினால் அது தவறாகும். ஜோதிட பரிபாஷையில் யோகங்கள் என்ற வார்த்தை ஒரு கிரகத்திற்கும் இன்னொரு கிரகத்திற்கும் தொடர்பை குறிக்கும் குறியிட்டு வார்த்தை தான். இந்த வார்த்தை தனித்தனி கிரகங்களோடு சம்பந்தப்படும் போது பலவித அர்த்தங்களைத் தருகிறது. அப்படி அர்த்தங்களைத் தரும் ஜாதக யோகங்கள் 300க்கும் மேல் இருக்கிறது. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

சந்திரன் சம்பந்தப்பட்ட யோகங்கள்:

      முதலில் சந்திரனோடு மற்ற கிரகங்கள் சம்பந்தப்படும் போது ஏற்படும் யோகங்களைக் கவனிப்போம்.  ஒரு ஜாதகத்தில் சந்திரனுக்கு முன்னும் பின்னும் சூரியன், ராகு, கேது தவிர வேறு கிரகங்கள் இருந்தால் அது துருதரா யோகம் எனப்படும்.  இந்த யோகம் ஜாதகனுக்கு நல்ல உறவையும் நல்ல குணத்தையும் வாகன சுகத்தையும் கொடுக்கும்.

  அதேபோல சந்தினுக்கு 12வது இடத்தில் ராகு கேதுக்களைத் தவிர வேறு கிரகங்கள் இருந்தால் அநபா யோகம் எனப்படும்.  இந்த யோகம் ஆரோக்கியத்தையும், பெயர் புகழையும் தரும்.

  சந்திரனுக்கு 2ம் இடத்தில் சூரியன், ராகு, கேதுக்களைத் தவிர வேறு கிரகங்கள் இருந்தால் அது சுநபா யோகம் எனப்படும்.  இந்த யோகம் சாதாரண மனிதனை உழைப்பின் மூலமாக உயர்த்தி அரசனுக்குச் சமமாக ஆக்கிவிடும்.


   சந்திரனுக்கு முன்னும் பின்னும் கிரகங்கள் எதுவும் இல்லாது அது கேமத்துருமம் என்னும் யோகமாகும்.  இந்த யோகம் ஒரு ஜாதகத்தில் இருந்தால் அவன் கோடீஸ்வரனாகப் பிறந்தாலும் சாவதற்குள் அவனைப் பிச்சைக்காரனாக நடுவீதியில் நிறுத்திவிடும்.

  சந்திரனுக்கு 1, 4, 7, 10 ஆகிய ஸ்தானங்களில் குரு இருந்தால் அது கஜகேச யோகமாகும்.  இந்த யோகம் தீர்க்காயுளையும், புகழையும், பண வருவாயையும், வாகன சுகத்தையும் கொடுக்கும்.

 ஜாதகத்தில் சந்திரனும் செவ்வாயும் சேர்ந்திருந்தால் அது சந்திர மங்கள யோகமாகும்.  இந்த யோகம் அசையாத சொத்துக்களை அதிகமாகத் தரும்.  அதேநேரம் இக்கிரகங்களை அசுப கிரகம் ஏதாவது ஒன்று பார்த்தால் ஜாதகனுக்குச் சொத்துக்களைக் கொடுத்து மூளைக் கோளாறைத் தரும்.

 சந்திரனுக்கு 8, (அ) 12ல் குரு இருந்தால் அது சகடயோகமாகும்.  இந்த யோகத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை நிலையில்லாமல் சக்கரம் போல் மேலும் கீழும் சுற்றிக் கொண்டே இருக்கும்.


 சூரியன் சம்பந்தப்பட்ட யோகங்கள்:

  சூரியனுக்கு 2ல் சந்திரன், ராகு, கேது, தவிர, வேறு கிரகங்கள் இருந்தால் அது வேசி யோகம் எனப்படும்.  இந்த யோகத்தோடு பிறந்த ஆண் ஆனாலும் பெண் ஆனாலும் சுய கௌரவத்தை இழந்து பணம் மற்றும் சொத்துக்களைப் பெறுவார்கள்.

  சூரியனுக்கு 12ல் ராகு, கேதுக்களைத் தவிர மற்ற கிரகங்கள் இருந்தால் அது வாசியோகமாகும்.  இந்த யோகம் பெரும் புகழை ஜாதகன் பெறும்படிச் செய்யும்.  சூரியன் இருக்கும் ராசிக்கு இரு பக்கங்களிலும் எந்தக் கிரகம் இருந்தாலும் அது சுய உபயசாரி யோகம் எனப்படும்.  இது நல்ல வருவாயையும புகழையும் ஈட்டித்தரும்.

  ஜோதிடப்படி மிகச்சிறந்த யோகம் கஜகேசரி யோகமாகும் குரு உச்சம் பெற்ற ஜாதகருக்கு மட்டுமே அமையும்

  இவைகள் தவிர பத்ரயோகம், ரூசக யோகம், கசயோகம், ஹம்ச யோகம், மாலவ்ய யோகம் என்று பஞ்சமகா புருஷ யோகங்கள்  உள்ளன இந்த யோகங்கள் எல்லாமே ஜாதகத்தில் கிரக நிலைகள்  நல்லபடி அமைந்திருந்தால் மட்டுமே முழுமையான பலன்களைத் தரும்.  இப்படி அமையாவிட்டால் அரைப்பாகம், கால்பாகம் என்று தான் பலன்களைத் தரும்.


Thursday, December 29, 2011

அரசமரத்தடி விநாயகர் அதிக சக்தி வாய்ந்தவரா? கணபதியின் திருநாமங்கள் எத்தனை?

                                                                           
ரச மரத்தடி விநாயகர் மட்டுமல்ல அரசமரமே சக்தி வாய்ந்தது தான்.  பெரியவர்கள் பஞ்சாயத்து பேசுவதற்கும் சிறியவர்கள் பம்பரம் விளையாடுவதற்கு மட்டுமே அரசமர நிழல் பயன்படுவதாக நினைப்பது தவறு.  சித்திரை, வைகாசி போன்ற மாதங்களில் மதிய நேரம் அந்த நிழலில் இளைப்பாறினாலே தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.  இருக்கும் நோய் கூட வீரியம் குறையும். 

அரசமர காற்றிலிருக்கும் ஒரு வித மருத்துவ தன்மை கருப்பையில் கருதங்காது இருக்கும் நிலையை மாற்றுகிறது.  கண்ணை மூடி தியானம் செய்தால் மனம் குவியவில்லை எங்கெங்கோ அலைபாயுகிறது என கஷ்டப்படுபவர்கள் அரச மரத்தடியில் தியானம் செய்ய பழகுவார்களானால் சீக்கிரம் மனம் குவிந்து விடுவதை உணருவார்கள்.  

    புத்தனுக்கு ஞானம் தந்த போதிமரம் அரச மரம் தான் என்பதை நினைவில் கொண்டால் அதன் மகத்துவம் என்னவென்று எளிதாக தெரியும்.  மரத்திற்கே இத்தகைய சக்தி என்றால் அதன் அடியில் இருக்கும் மூர்த்தியின் சக்தியை பற்றி சொல்லவே வேண்டாம்.  பிரபஞ்சத்தில் இருக்கும் பிரனவ சக்தியானது மிக சுலபமாக அரசமரத்தடி விநாயகரால் ஈர்த்து பக்தர்களுக்கு வழங்க முடியும். அதனால் தினசரி அரச மரத்தடி தொப்பை கணபதிக்கு தோப்புகரணம் போட்டு உடலை ஆரோக்கிய படுத்தி கொள்ளுங்கள்  

     எல்லா தெய்வங்களுக்கும் பக்தர்கள் தங்களது விருப்படி ஆயிரமாயிரம் பெயர்களை சூட்டி மகிழ்வது இயற்கை.  அதனால் தான் ஓர் நாமம், ஓர் உருவம், இல்லாதவர்க்கு ஆயிரம் திருநாமம், ஆயிரம் உருவம் என்று நமது முன்னோர்கள் சொன்னார்கள். 

   எத்தனை பெயர் சூட்டினாலும் சிறப்பித்து சொல்லப்படுவது சிலப்பெயர்களை மட்டும் தான்.  அதே போல பிள்ளையாருக்கு    ஏகதந்தர் ,சுமூகர், கஜகர்னர், கபிலர், லம்போதரர், விகடர், விநாயகர், விக்கன ராஜர், தூமகேது, கணத்தச்சர், கஜானனர், பால சந்திரர் என்று பன்னிரெண்டு திருநாமங்கள் சிறப்பாக சொல்லப்படுகிறது.

Wednesday, December 28, 2011

நொறுக்கு தீனி பிடிக்குமா உயிரணு பாதிப்பு வரலாம்


மேட்ரிட் : டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பு அதிகமுள்ள நொறுக்கு தீனிகளை சாப்பிடும் இளைஞர்களுக்கு விந்தணு பாதிப்பு ஏற்படக்கூடும் என்று அமெரிக்கா, ஸ்பெயின் நாடுகளின் ஆராய்ச்சி எச்சரிக்கிறது. இதுகுறித்து ஹார்வேர்டு பல்கலைக்கழகம், ஸ்பெயினின் முர்சியா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் வெளியான தகவல் வருமாறு:

ஊட்டச் சத்து உணவை சாப்பிட்டு வந்த 18 முதல் 22 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களைவிட ஜங்க் புட் எனப்படும் நொறுக்கு தீனி, சாட் வகைகளை அதிகம் சாப்பிட்டு வந்த இளைஞர்களுக்கு உயிரணு எண்ணிக்கை குறைந்தது ஆய்வில் தெரிய வந்தது. நொறுக்கு தீனி, சாட் வகைகளை தொடாத இளைஞர்களைவிட அவற்றை சாப்பிடும் இளைஞர்களில் உயிரணுக்கள் சரியாக இருந்தவர்களுக்கும் அவற்றின் ஊர்ந்து சென்று கரு உண்டாக்கும் வேகம் (மொபிலிடி) குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சரியான உடல் எடை, உடற்பயிற்சி பழக்கத்துடன் இருந்தவர்களிடமும் இது ஏற்பட்டது தெரிந்தது.

இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டது. இதே விஷயத்தில் ஜப்பானில் நடந்த ஆய்வும் இதையே தெரிவித்துள்ளது. 215 இளைஞர்களிடம் நடந்த சோதனைகளில் இது நிரூபணமானது. இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பு அதிகமுள்ள கேக், பீட்சா, பர்கர், சாக்கோ டிரிங்க், சிப்ஸ், கேண்டி ஆகியவற்றை அதிகம் சாப்பிடும் இளைஞர்களுக்கு உயிரணு எண்ணிக்கை பாதிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டது. தினசரி உணவில் 2 கிராம் டிரான்ஸ் ஃபேட் போதுமானது. ஆனால், இந்த நொறுக்கு தீனி, சாட் வகைகளில் அவை கூடுதலாக இருப்பது இளைஞர்களிடம் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Friday, December 23, 2011

சூரிய மண்டலத்துக்கு வெளியே பூமி அளவில் 2 புதிய கிரகங்கள்!

நியூயார்க் : சூரிய மண்டலத்துக்கு வெளியே பூமி அளவில் 2 புதிய கிரகங்கள் இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ‘நாசா’ நேற்று அறிவித்தது. இதுகுறித்து ‘நாசா’ வெளியிட்ட அறிக்கை வருமாறு: விண்வெளியில் உயிரினங்கள் வசிக்க சாத்தியமுள்ள புதிய கிரகங்கள் குறித்து, கெப்ளர் என்ற வரிசையில் பெயரிட்டு, நாசா ஆராய்ந்து வருகிறது. அதில் புதிதாக 2 கிரகங்கள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூமி உட்பட 9 கிரகங்கள் சுற்றி வரும் சூரிய மண்டலத்துக்கு வெளியே இந்த புதிய கிரகங்கள் இருக்கின்றன. சூரியனை போன்ற பெரிய நட்சத்திரத்தை இவை சுற்றி வருகின்றன. இரண்டு கிரகங்களும் பூமியின் அளவில் இருக்கின்றன.

அவற்றுக்கு கெப்ளர்&20இ, கெப்ளர்&20எப் என்று பெயரிடப்பட்டுள்ளது. சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்கள் இடையே உள்ள இடைவெளியைப் போல இல்லாமல், புதிய கிரகங்கள், பெரிய நட்சத்திரத்தின் மிக அருகே இருக்கின்றன. அங்கு திரவ நிலையில் தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளது. பூமியைப் போன்ற புதிய கிரகங்கள் பற்றிய ஆராய்ச்சியில் இந்த கண்டுபிடிப்பு ஒரு முக்கிய மைல்கல். கெப்ளர் &20இ, கெப்ளர் &20எப் ஆகியவை முழுவதும் பாறைகளால் ஆனதாக இருக்கலாம்.

முதல் கிரகம் பூமியின் அளவிலும், கெப்ளர் &20எப் பூமியை விட சிறிது பெரிதாகவும் உள்ளன. நட்சத்திரத்தை கெப்ளர் &20இ கிரகம் 6.1 ஒரு நாளில் சுற்றி வருகிறது. கெப்ளர் &20எப், 19.6 நாட்களில் சுற்றி வருகிறது. இவ்வளவு குறைந்த காலத்தில் அதிக வெப்பம் கொண்ட நட்சத்திரத்தின் அருகில் இருந்து சுற்றுவதால் அதிக வெப்பநிலை காரணமாக இந்த கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமாகாது.

கெப்ளர் &20இ கிரகத்தின் வெப்பநிலை 1,400 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் இருக்கும். கெப்ளர் &20எப் வெப்பநிலை 800 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும்.
இவை வசிக்க தகுதியற்றதாக இருந்தாலும், பூமியை போல உயிர்கள் வசிக்க சாத்தியமுள்ள கிரகங்களை ஆராயும் கெப்ளர் திட்டத்தில் பூமி அளவில் 2 கிரகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது முதல்முறை. இவ்வாறு நாசா அறிக்கை தெரிவிக்கிறது.