மயிலாப்பூரில் உள்ள பீச் ஹவுஸ், தற்போது ராணி மேரி கல்லூரி வளாகமாக செயல்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் வக்கீல் பிலகிரி ஐயங்கார் பீச் ஹவுசில்
வசித்தார். பின்னர் எஸ்.சுப்பிரமணிய ஐயர் என்ற மணி ஐயர் இந்த வீட்டுக்கு உரிமையாளரானார்.
மணி ஐயர் 1869ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டின் புகழ்பெற்ற முன்னணி வக்கீலாக இருந்தார். பின்னர் 1888ம் ஆண்டு அரசு வக்கீலானார். தனது திறமையால்
படிப்படியாக வளர்ந்து 1891ம் ஆண்டு துணை நீதிபதி பொறுப்பேற்றார். பின்னர் 1895ம் ஆண்டு நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 1907ம் ஆண்டு வரை
தலைமை நீதிபதியாக பணியாற்றிய இவர், பார்வை கோளாறு காரணமாக ஓய்வு பெற்றார். மணி ஐயர் இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராகவும், சென்னை
பல்கலைக்கழகத்தின் செனட் சபையில் உறுப்பினராகவும் இருந்தார்.
மணி ஐயருக்கு பணிச்சுமை அதிகமாக இருந்த நேரத்தில் பீச் ஹவுஸ் அமைதியைத் தந்தது. அவர் வசித்த பீச் ஹவுஸ் அழகான பால்கனிகளுடன் சிறப்பாக
வடிவமைக்கப்பட்டிருந்தது. தற்போது பீச் ஹவுஸ் ராணி மேரி கல்லூரி வளாகமாக செயல்பட்டு வருகிறது.
1932ம் ஆண்டு லட்சுமணசுவாமி முதலியார் என்பவர் கீழ்ப்பாக்கத்தில் தன்வந்திரி மாளிகையைக் கட்டினார். ராமசாமி, லட்சுமணசுவாமி முதலியார் ஆகியோர்
இரட்டையர்கள். ராமசாமி முதலியார் வக்கீலாகவும், லட்சுமணசுவாமி முதலியார் மருத்துவராகவும் பணியாற்றினர்.
லட்சுமணசுவாமி முதலியார் சென்னை மருத்துவ கல்லூரியில், இந்தியாவின் சார்பில் முதல் பிரின்சிபாலாக பதவி வகித்தவர். பின்னர் சென்னை
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பெறுப்பேற்றார். இவர் மருத்துவ பணியில் சிறந்து விளங்கியதற்காக இந்திய அரசின் 'பத்ம விபூஷன்' விருதை பெற்றார்.
ராமசாமி முதலியார் வக்கீலாக இருந்து கொண்டு சமூக சேவை மற்றும் அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். சென்னை மேல்சபையில் எம்.எல்.சி., பதவி
வகித்துள்ளார்.
சென்னையில் மருத்துவ பணியாற்றி வந்த லட்சுமணசுவாமி முதலியார் தன்வந்திரி மாளிகையை கட்டினார். சகோதரர்கள் இருவரும் இந்த மாளிகையில் வசித்து
வந்தனர். இடப்பற்றாக்குறை காரணமாக ராமசாமி முதலியார் வேறு இடத்துக்கு குடிபெயர்ந்தார். தற்போது ராமசாமி முதலியாரின் வாரிசுகள் இந்த மாளிகையின்
உரிமையாளர்களாக உள்ளனர்.
நடிகர் திலகம் சிவாஜியின் மகன்கள் தற்போது வசிக்கும் அன்னை இல்லத்தை, ஐ.சி.எஸ்., அதிகாரி ஜார்ஜ் டி.போக் என்பவர் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில்
கட்டினார். இருபதாம் நூற்றாண்டின் கலையம்சத்துடன் இந்த வீட்டின் முகப்பை ஜார்ஜ் போக் அமைத்தார். இவரின் நினைவாக அந்த வீட்டின் சாலைக்கு 'தெற்கு
போக்' சாலை என, அப்போது பெயரிடப்பட்டது.
பின்னர் இந்த அன்னை இல்லத்தை குர்மா வெங்கட ரெட்டி நாயுடு என்பவர் வாங்கினார். அடுத்ததாக இந்த இல்லத்தை இஸ்லாமிய குடும்பம் ஒன்று வாங்கியது.
அவர்களிடமிருந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1959ம் ஆண்டு இந்த வீட்டை வாங்கி 'அன்னை இல்லம்' என பெயரிட்டார்.
தற்போது இந்த அன்னை இல்லத்தில் சிவாஜியின் மகன்கள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நடிகர் திலகர் சிவாஜியின் நினைவாக விளங்கும் இந்த வீட்டை,
அவரின் வாரிசுகள் பராமரித்து வருகின்றனர். சிவாஜியின் மறைவுக்கு பிறகு இந்த வீட்டின் சாலைக்கு 'சிவாஜி கணேசன் சாலை' என பெயர் மாற்றம்
செய்யப்பட்டது.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் திருவல்லிக்கேணியில் வசித்த வீட்டை, தற்பொழுது தமிழக அரசு பராமரித்து வருகிறது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக
பிரிட்டிஷ் அரசால் 1908ம் ஆண்டு தேடப்பட்டு வந்தார். அப்போது பாரதியார் புதுச்சேரியில் வசித்து வந்தார்.
பின்னர் 1920ம் ஆண்டு,பாரதி சென்னைக்கு வந்து சுதேசமித்திரன் பத்திரிகையில் பணியாற்றினார். அப்போது, திருவல்லிக்கேணியில் ஒரு அறை, மற்றும்
சமையலறை கொண்ட சிறிய வீட்டில் தமது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார்.
இந்த வீட்டில் இருந்த போது பாரதியார் அடிக்கடி பார்த்தசாரதி கோயிலுக்கு சென்று வருவார். ஒருமுறை கோயிலில் யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டார்.
பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டு பாரதி இறந்தார்.
பாரதியாரின் இறப்புக்கு பிறகு இந்த வீடு பலரது கைக்கு மாறியது. வீட்டின் அமைப்பிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன.
பின்னர் இசென்னையில் பிரிட்டிஷார் கட்டிய கட்டடங்கள் அனைத்துக்கும் ஆங்கிலத்தில் தான் பெயர் வைக்கப்பட்டது. பின்னரே அந்த கட்டடங்களுக்கு தமிழ்
பெயர்கள் சூட்டப்பட்டன. அந்த வகையில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பிராடி காஸில் கட்டடத்துக்கு தமிழில் தென்றல் என பெயர் வைத்துள்ளனர். அதில்
தற்போது இசைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்த கட்டடம் ஜேம்ஸ் பிராடி என்பவரால் 1796ம் ஆண்டு கட்ட ஆரம்பித்து 1798ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 11 ஏக்கர் நிலம் இந்த கட்டடத்துக்கு
ஒதுக்கப்பட்டது. 1801ம் ஆண்டு அடையாறு ஆற்றில் ஏற்பட்ட படகு விபத்து காரணமாக இந்த வீட்டை ஜேம்ஸ் பிராடி அரசாங்கத்துக்கு விற்றார்.
பி.எஸ்.குமாரசாமி ராஜா மற்றும் சில நீதிபதிகள் ஆகியோர் வசம் இந்த வீடு மாறி, மாறி வந்தது. 1948ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மத்திய கர்நாடக
இசைக்கல்லூரி, 1956ம் ஆண்டு முதல் இந்த கட்டடத்தில் செயல்பட துவங்கியது. இதில் முசிறி சுப்பிரமணிய அய்யர், டி.பிருந்தா மற்றும் திருபாம்புரம்
சுவாமிநாத பிள்ளை ஆகிய பிரபலங்கள் ஆசிரியர்களாக பணியாற்றினர். நீண்ட காலம் ஆனதால் இந்த கட்டடத்தின் சுவர்கள் சேதமடைந்து வருகின்றன.
ஆனாலும் இதன் கவர்ச்சி மட்டும் இன்னும் மாறாமல் உள்ளது.ந்த வீட்டை தமிழக அரசு வாங்கியது. பாரதியின் நினைவாக இந்த வீட்டை அருங்காட்சியமாக
தமிழக அரசு மாற்றியுள்ளது.
பக்தர்களை காக்கும் பார்த்தசாரதி
----------------------------------
நம் கோரிக்கைகள் நியாயமானதாக இருந்தால், அவை பார்த்தசாரதியின் துனையோடு நிறைவேறும் என்பது உண்மை. மிக மோசமான சூழலுக்கு தள்ளப்பட்ட
பக்தர்களை கை கொடுத்து காப்பாற்றுவார் என்ற அபாரமான நம்பிக்கையும், கோரிக்கைகளை நிறைவேற்ற தவறாதவர் என்ற பெருமை பெற்றவர் பார்த்தசாரதி
பெருமாள். பார்த்தனுக்கு சாரதியாக விளங்கியதால், பார்த்தசாரதி என்ற பெயர் பெற்றார். மகாபாரதத்தில் அர்ஜூனனுக்கு சாரதியாக வந்த கிருஷ்ணருக்கு; போரில்
விழுப்புண் ஏற்பட்டு, முகத்தில் தழும்பு ஏற்பட்டது. தர்மத்தை நிலைநிறுத்த போரில் ஆக்ரோஷ மீசையுடன், வில் அம்புகளோடு களமிறங்கினார். அப்போது ஏற்பட்ட
காயங்களால் வீரத்தழும்புகள் ஏற்பட்டது. அந்த தோற்றம் தான் திருவல்லிக்கேனி பார்த்தசாரதி பெருமாள். எங்கும் காண முடியாத காட்சியை பக்தர்கள் இங்கு
தரிசிக்கின்றனர். தாயார் பாமா, ருக்மணி சமேதரராக பார்த்தசாரதி வீரத்தழும்புகளோடு, மீசையுடன் காட்சியளிக்கிறார்.
கோவில் ஸ்தலபுராணம் பிருந்தாரண்ய மகாத்மியம் என்ற அத்தியாயத்தில் எழுதப்பட்டுள்ளது. பிருந்தம் என்பது துளசியையும், ஆரண்யம் என்பது காடு என்பதை
குறிப்பிடுகிறது. அதற்கேற்ப இப்பகுதி முன்பு துளசிக்காடாக காட்சியளித்தது.
திருவல்லிக்கேணி பகுதியை சுமதி என்ற அரசன் ஆண்டார். தேரோட்டியாக இருந்த பெருமாளின் உருவத்தை காண; நீண்ட காலமாக தவமிருந்தார். கோரிக்கையை
ஏற்ற சுவாமி, அசரீரியாக தகவல் தெரிவித்தார். அதன் பேரில் பிருந்தாரண்யத்துக்கு மன்னர் சென்று பார்த்த போது அவருக்கு பார்த்த சாரதியாக பெருமாள் ஒரு
கையில் சங்கையும், மற்றொரு கையில் பாதாரவிந்தந்தோடும் காட்சியளித்தார்.
இக்கோவில் 800 ம் ஆண்டை சேர்ந்த பழமையானது. கோவில் வளாகத்தில் ஏராளமான கல்வெட்டுகள் இடம் பெற்றுள்ளன. கோவிலுக்கு அளித்த கொடைகள்,
அரசர்கள் மேற்கொண்ட பணிகள் பற்றி இக்கல்வெட்டுகள் தகவல் தருகின்றன. மகாலட்சுமி, பூதேவித்தாயார், நரசிம்மபெருமாள், வராகநாராயணப்பெருமாள்,
சேஷன், கிருஷ்ணன், ருக்மணிதேவி, அனிருத்ரன், சாத்திகையாழ்வார் உள்ளிட்ட விக்கிரகங்கள் உள்ளன. 11 ஆழ்வார்களுக்கு உற்சவங்கள் நடந்தாலும்;
வேதவல்லிநாச்சியாருக்கென்று தனியாக உற்சவம் நடத்தப்படுகிறது.
கோவிலைப்பற்றி திருமங்கையாழ்வார் பத்து பாசுரங்களையும்; பேயாழ்வார், திருமழிசையாழ்வார் தலா ஒரு பாசுரமும் பாடியுள்ளனர். அல்லிக்குளம் கோவிலின்
புஷ்கரணியாகும். வைணவர்களின் வரம் தீர்க்கும் கோவிலாக திகழ்கிறது. அதனால் பணி நிமித்தமாக நாடு முழுக்கச் சுற்றினாலும், பார்த்தசாரதியை
ஆண்டுக்கொருமுறை வந்து தரிசனம் செய்துவிட்டு போக பக்தர்கள் யாரும் தயங்குவதில்லை.
ஆங்கிலேயர்களுக்கு மதராஸ் அறிமுகமாவதற்கு பல நூற்றாண்டுக்கு முன்பே மதராசப்பட்டினம் தமிழகத்தின் வடநாடாக அறிமுகமாகியிருந்தது.
அப்போது தமிழகம் மட்டுமல்லாமல், நாட்டின் பல பகுதிகளிலிருந்து; மதராஸிலுள்ள கோவில்களை வழிபட ஏராளமான பக்தர்கள் வருகைபுரிந்தனர். அதே போல்
கிறித்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் வழிபாட்டுத்தலங்கள் ஏராளமாக இருந்தது. சென்னையைப் போல உலகில் வேறெங்கும் இது போன்று
மும்மதத்தினருக்கேற்ற வழிபாட்டுத்தலங்கள் ஒரே பகுதியில் இல்லை என்பது சென்னைவாசிகளுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்.
அங்கப்பநாயக்கன் தெருவில் 8ம் நூற்றாண்டின் பெரிய மசூதி உள்ளது. ஆற்காடு நவாப் 19 ம் நூற்றாண்டில் கருங்கற்களால் அழகுற கட்டிபுதுப்பொலிவு
ஏற்படுத்தினார். கோரல் மெர்ச்சென்ட் தெருவில் யூதர்கள் தொழுவதற்காக சர்ச் இருந்தது. அதே போல் ஆர்மேனியர்களுக்காக 1642ல் செயின்ட் மேரி ஆப்தி
ஏஞ்சல்ஸ் கதீட்ரல் காபுச்சியன் பாதிரியாரால் கட்டப்பட்டது. 1810 ல் டேவிட்சன் தெருவில் பிராட்டஸ்டன்ட் சர்ச் கட்டப்பட்டது. இது தவிர பார்சிகளுக்கும்,
யூதர்களுக்கும், ஆர்மேனியர்களுக்கும், முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் மதராசபட்டணத்தில் வழிபாட்டுத்தலங்கள் ஏராளமாக அமைந்திருந்தன.
சரித்திரத்தொன்மை வாய்ந்த மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலும், திருவல்லிக்கேணி பார்த்தசாõரதி பெருமாள் கோவில், மருந்தீஸ்வரர் கோவில்கள்
நூற்றாண்டுகள் கடந்தும், இன்றளவும் பக்தர்கள் அதிக அளவில் வழிபாடு செய்து வரும் வழிபாட்டுத்தலங்கள் ஆகும்.
பார்த்தசாரதி பெருமாள் சம்பிரதாயத்திலுள்ள மற்ற சுவாமிகளை போலல்லாமல், வித்தியாசமான மீசையோடு, முகத்தில் தழும்புகளோடு காட்சியளிக்கிறார்.
மகாபாரதத்தில் அர்ஜூனனுக்கு தேரோட்டியாக வந்தபோது நடந்த நிகழ்வுகளை பிரதிபலிக்கும் வகையில் சுவாமி உருவம் அமைந்துள்ளது. கோவில் <<9ம்
நூற்றாண்டில் உருவானதாக வரலாற்றுச்சான்றுகள் குறிப்பிடுகின்றன. கோவிலின் திருக்குளத்தில் அல்லிமலர்கள் நிறைந்திருந்ததால், திருஅல்லிக்கேணி என்ற
அழைக்கப்படுகிறது. பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவிலாகும்.
மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோவில் பற்றி ஆறாம் நூற்றாண்டு இலக்கியங்களில் குறிப்பு உள்ளது. சிவன், பிரம்மனின் தலையைக் கொய்து
கையிலேந்தி நின்றதால், கபாலீஸ்வரர் என்றழைக்கின்றனர். இது குறித்த விவரம் ஸ்கந்தபுராணம், கூர்மபுராணம், வராஹபுராணங்களில் குறிப்பிட்டுள்ளது.
திருஞானசம்பந்தர், திருமழிசை ஆழ்வாரால் பாடப்பட்ட ஸ்தலம்.
அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர் ஆகிய மூவரால் பாடப்பட்ட ஸ்தலம் திருவொற்றியூர் கோவில்; தொண்டை மண்டல 32 சிவ ஸ்தலங்களில் முக்கியமானது.
சோழர் காலத்தில் கட்டப்பட்டது. பாண்டிய அரசன் ஜடவர்மன் திரிபுவனசக்கரவர்த்தி சுந்தரபாண்டித்தேவனால் கட்டப்பட்டது திருமுல்லை வாயில். மூலவராக
மாசிலாமணீஸ்வரர் காட்சியளிக்கிறார்.
ராமாயணத்தை எழுதிய வால்மீகியால் வழிபாடு செய்யப்பட்ட மருந்தீஸ்வரர் கோவில் புரதானமானது. இங்கு தியாகராஜ சுவாமிகளின் உருவச்சிலை உள்ளது.
இக்கோவில் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. சைவமும், வைணவமும் தழைக்கவும்; இந்து ,கிறிஸ்தவ, இஸ்லாமிய மதம் தழைக்கவும் ஏராளமான
வழிபாட்டுதலங்களை அமைத்த நம் முன்னோர் பெருமை சேர்த்துள்ளனர். அதை சரியான முறையில் பராமரித்து நம் பாரம்பரிய பெருமையை நாம் காப்போம்.
பாரம்பரிய சின்ன பாதுகாப்பு
-----------------------------
தமிழக அரசின் முயற்சியால் சென்னை மாநகரின் பல பாரம்பரிய கட்டடங்கள் புதுப்பொலிவு பெற்று வருகின்றன. அவற்றில் தமிழ்நாடு காவல்துறை தலைமை
அலுவலகமும் ஒன்று.
தற்போது காவல்துறை தலைமை அலுவலகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மிளிர்கின்றது. புதிய கட்டடமும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில்
பழைய கட்டடத்தின் பாணியிலேயே கட்டப்பட்டுள்ளது. பழமையையும் பாரம்பரியத்தை பேணிகாத்து வருகிறது சென்னை மாநகரம் என்பதை இது நிரூபிக்கும்
வகையில் அமைந்துள்ளது.
கடற்கரை சாலையில் உள்ள நேப்பியர் பாலத்தை மேம்படுத்தும் வகையில் அதை போலவே புதிதாக இரண்டாவது நேப்பியர் பாலமும் அமைக்கப்பட்டது. இரண்டும்
ஒரே மாதிரி தோற்றம் அளிப்பது சென்னை மாநகர மக்களின் மனதை கவர்ந்துள்ளது.
சென்னையில் உள்ள பாரம்பரியம் மிக்க செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் வெளிப்புறம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காண்போர் மனதை கொள்ளை
கொள்கிறது. சென்னை கன்னிமாரா நூலகத்தின் பழைமையான கட்டடமும், 2007 ஆம் ஆண்டு பழையவடிவமைப்பு மாறாமல் புதிப்பிக்கப்பட்டது. மேலும் கடந்த
சில ஆண்டுகளாவே சென்னையில் உள்ள மே தின பூங்கா, மை லேடி பூங்கா, பனகல் பார்க், டாக்டர் நடேசன் பூங்கா போன்ற அனைத்து பூங்காக்களும்
புதுப்பிக்கப்பட்டு சென்னையை பசுமையாக்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது.
சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள நடைபாதை, புல்வெளி போன்ற பகுதிகள் அழகுபடுத்தப்பட்டுள்ளதும் காண்போரை மகிழ்விக்கின்றன. இதைபோன்ற
சென்னை மாநகரத்தின் பழைமையான பாரம்பரியமிக்க நினைவு சின்னங்கள், கட்டடங்கள், சிலைகள் போன்றவற்றை தொடர்ந்து பராமரிக்கவும், பாதுகாக்கவும்,
பேணிக்காக்கவும் சென்னை பாரம்பரிய சின்னங்களுக்கான ஒரு பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்பது சென்னை மக்களின் நீண்ட கால கோரிக்கை.
சென்னப்பட்டினமும், மதராசப்பட்டினமும்
-----------------------------------------
சென்னப்பநாயக்கன் பட்டினம்தான் சென்னைப்பட்டினமாக திரிந்தது; ஆங்கிலேயர்கள் வந்தபிறகே, சென்னைப்பட்டினமும், மதராசப்பட்டினமும் தோன்றின.
சென்னைப்பட்டினமும், மதராசப்பட்டினமும் தனித்தனியே இருந்து, குடியிருப்புகள் அதிகரித்தபின் ஒரே நகரமாக, நிர்வாக வசதிக்காக ஆங்கிலேயர்களால்
மதராசப்பட்டினம் என மாற்றப்பட்டது.
இதுபோன்ற ஏராளமான தகவல்கள் சென்னையைப் பற்றியும், மெட்ராஸ் எனப்படும் மதராசப்பட்டினத்தைப் பற்றியும் உலவி வருகின்றன. ஆங்கிலேயரே
மதராசப்பட்டினத்தை தோற்றுவித்ததாகவே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது.
ஆனால், "மதராசப்பட்டினமும், சென்னைப்பட்டினமும் ஏற்கனவே இருந்தவைதான். இரண்டுமே தனித்தனி குடியிருப்புகள். ஆங்கிலேயர் வருகைக்கு முன்னரே
இவ்விரு குடியிருப்புகளும் இருந்தன என்ற கருத்தை ஆய்வாளர் நரசய்யா வலுவான ஆதாரங்களுடன் முன்வைக்கிறார்.
"மதராசப்பட்டினம்' நூலில், ஆசிரியர் <உரையில் மதராசப்பட்டினம் என்ற நூலின் தலைப்புக்கான காரணத்தை விளக்கும் போது, இதுதொடர்பாக பல்வேறு
ஆதாரங்களை முன்வைக்கிறார் நரசய்யா. அந்த ஆதாரங்களின் படி, இரு பட்டினங்களுமே ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் இருந்தன என்பது உறுதியாகிறது.
அந்நூலிலிருந்து....
இவ்வூரின் பெயரை சென்னை என மாற்றியபோது கூட பல சரித்திர ஆசிரியர்கள் அதை எதிர்த்தனர். சரித்திரத்தில் பல விஷயங்கள் அவ்வப்போது
ஆராய்ச்சியாளர்களால் வெளிக்கொணரப்பட்டாலும், எத்தனையோ விஷயங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் புதையுண்டு கிடக்கின்றன. எனவே, எதையும்
அறுதியிட்டுக் கூற முடியாது.
ஐரோப்பிய குறிப்புகளின் படி, கரையோரத்தில் மதராசப்பட்டினம், சென்னப்பட்டினம் என்று இரண்டு ஊர்கள் இருந்தன எனத் தெரிகிறது. சிலர் கூற்றுகள் படி, தாமரல
ஐயப்பா(தாமரல குடும்பத்தாரிடம் இருந்துதான் ஆங்கிலேயர்கள் நிலம் வாங்கி கோட்டை கட்டினர்) ஆங்கிலேயர்களை தன் தந்தையின் நினைவாகச்
சென்னபட்டினம் என பெயரிட வேண்டிக் கேட்டுக்கொண்டதாக சொல்லப்படுவதற்கு, ஆதாரப்பூர்வமான குறிப்புகள் காணக்கிடைக்கவில்லை.
1658லிருந்து 1662 வரை ஏஜென்டாக இருந்த சேம்பர்ஸ் என்பவர் குறிப்பு இதற்கு மேற்கோளாகக் காட்டப்படுகிறது. அக்குறிப்பில், "நாங்கள் ஆர்மகானில் இருந்த
போது, தாமரல ஜப நாயுடு, டே என்பவருக்கு எழுதியதில், தனது தந்தை சென்னப்ப நாயுடு பெயரில் ஓர் ஊரை உண்டாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாகத்
தெரிகிறது' என்று உள்ளது.
ஆனால், இதைக்குறித்து எந்த இடத்திலும் கோட்டையை நிறுவிய டே என்பவராலோ, கோகனாலோ சொல்லப்படவில்லை. இதை எவ்வளவு தூரம் நம்ப முடியும்
என்றும் தெரியவில்லை' என்று "மதராசப்பட்டின நிறுவனம்' நூலாசிரியர் ராமசுவாமி கூறுகிறார்.
"ஆங்கிலேயர்கள் மெட்ராஸ் அல்லது சென்னகுப்பம் என்ற இடத்தில் குடியேறியதும், அங்கே அவர்கள் நிலைநாட்டிக் கொண்டதும் ஒரு சரித்திரக் குறிப்பு-ஒரு
மராத்தா கட்டுரை மொழிபெயர்ப்பு சி.வி.போரியா' என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதாவது:
"ஒரு கோட்டையைக் கட்ட முனைந்த ஆங்கிலேயர்கள், தாமரல குடும்பத்தினரை அணுகினர். போலிகர்கள் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட
பாளையக்காரர்கள், அவர்களுக்கு நான்கு கிராமங்களைக் கொடுத்தனர். அவை முறையே மதராசக்குப்பம்(இதைத்தான் அவர்கள் பின்னர் மதராஸ் என்றழைத்தனர்),
சென்னைக் குப்பம், ஆர்க்குப்பம், மாலேபட் என்பன'
இந்த விவரங்களில் இருந்து மதராசப்பட்டினம், சென்னப்பட்டினம் என்ற தனித்தனி இடங்கள் கிராமங்களாகப் பழங்காலத்திலேயே இருந்திருக்கின்றன என அறிய
முடிகிறது.
1639 செப்., 5ம் தேதியிடப்பட்ட மசூலிப்பட்டினத்துக் குறிப்பு ஒன்றில், "மதராசபட்டம் ஒரு துறைமுகப்பட்டினம் என்றும், அது புலிக்காட்டுக்கும், சாந்தோமிற்கும்
இடையில் இருப்பதாகவும்' தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மசூலிப்பட்டினத்து ஆங்கிலேயர்கள் சூரத்திற்கு அக்., 25, 1639ம் நாளில் எழுதிய கடிதத்தில், "மதராசபட்டம் என்ற ஒரு இடம் செயின்ட்தோமுக்கு அருகில்'
இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கம்பெனியின் ஆங்கிலேயக்குறிப்புகளில் இதனை மிகப்பழைமையான ஒன்றாக இதைக் கருதலாம்.
எனவே, 1640க்கு முன்னரே மதராசப்பட்டினம், சென்னப்பட்டினம் என்ற இரண்டு ஊர்களும் இருந்திருக்கின்றன என்று தெளிவாகிறது. காலத்தால் மதராசப்பட்டினம்
என்ற ஊர் சென்னப்பட்டினத்திற்கு முன்னரே இருந்தது; இரண்டும் வெவ்வேறு ஊர்கள் என்பதையும் இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.
நேர்மையாகவும், சரித்திர நோக்கிலும் சென்னையைப் பற்றி எழுதப்பட்ட முதல் நூல், டால்பாய்ஸ் வீலர் எழுதிய "மெட்ராஸ் இன் ஓல்டன் டைம்ஸ்' ஆகும்.
ஹென்றி டேவிசன் லவ் எழுதிய "வெஸ்டிஜஸ் ஆப் ஓல்ட் மெட்ராஸ்' நூலும் சிறந்த ஒன்று. இந்த இரு நூல்களிலும், மெக்ளீன் எழுதி மேலாண்மை குறித்த
நூலிலும், தற்போதைய சென்னை மதராசப்பட்டினம் என்றே குறிக்கப்பட்டிருக்கிறது.
அதேசமயம் வாய்வழியாக இப்பகுதி மக்களால் சென்னை என்று வழங்கப்பட்டு வந்தது. மதராசப்பட்டினம் என்ற பெயர் வந்ததற்கு எத்தனையோ காரணங்கள்
கூறப்பட்டாலும், வரலாற்று ரீதியாக ஒன்றும் நிரூபிக்கப்படவில்லை.
கன்னிமரா நூல்நிலையத்தில் துணை நூலகராகப் பணியாற்றிய சுவாமிநாதன் எழுதிய நூலில், "கி.பி., 1645ம் ஆண்டு சந்திரகிரி மகாராஜாவாக இருந்த
ஸ்ரீரங்கநாயர், இப்பகுதிக்கு தனது பெயராக ஸ்ரீரங்கராயபட்டினம் என்று பெயர் சூட்டினார். ஆனால், இப்பெயரை அவரைத் தவிர வேறு யாரும் பயன்படுத்தவில்லை'
எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, மதராசப்பட்டினம் என்ற பெயர் கொண்ட ஊர், ஆங்கிலேயர் வருகைக்கு சற்று முன்னரே அறியப்பட்டிருந்தது. இவ்விடத்தின் முக்கியப் பகுதிகள்
மயிலாப்பூர், திருவல்லிக்கேணி என்பதும் தெளிவாக உள்ளது.
இவ்வாறு, நரசய்யா தனது நூலில் தெரிவித்துள்ளார்.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில் இருவிஷயங்கள் தெளிவுபடுத்தப்படுகின்றன. முதலாவது சென்னப்பட்டனமும், மதராசப்பட்டனமும் வேறுவேறு ஊர்கள்; இ
ரண்டுமே ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் இருந்திருக்கின்றன. இரண்டாவது இவ்வூரின் பெயர்க்காரணங்களாகச் சொல்லப்படுபவைக்கு போதிய ஆதாரங்கள்
எதுவும் இல்லை.
நீதிமுறைகளும் தண்டனைகளும்
----------------------------------
எட்வர்ட் பாகஸ் என்பவரும் ஜோசப் லா பாம் என்பவரும் இங்கிலாந்தின் கப்பல் கடலூரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கையில் அதிலிருந்து 3000
பகோடாக்களைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டனர். அவர்களை நீதிமன்ற விசாரணை செய்த போது பாகஸுக்கு எதிராக வேறு ஒரு குற்றவாளிதான்
சாட்சியாக இருந்தார். இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அவர்களது மதத் தலைவர்கள் பிரார்த்தனைகளுக்காக அழைக்கப்பட்டனர். அப்போது பாதிரி மைக்கேல் என்பவர் பாகஸைக் குற்றவாளி இல்லையென, லா பாம்
ஒப்புதல் மூலம் தெரிந்து, கவுன்சிலுக்கு அதன்படி பாகஸ் தண்டிக்கப்படக் கூடாதென ஆலோசனை கூறினார். ஆனால், கவர்னர் பிட் இதில் ஏதோ மர்மம்
இருப்பதாக உணர்ந்தார். இருப்பினும், லா பாம் தண்டனையையும் நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டார்.
தூக்கு மேடையில் இந்த மனிதருடைய வாக்குமூலம் மறுபடியும் வாசிக்கப்பட்டது. அது உண்மையானது எனத் தெரிந்த பின்னர் அவர் மன்னிக்கப்பட்டார்.
மதராசப்பட்டினத்துத் தூக்குமேடையிலிருந்து விடுவிக்கப்பட்டு சரித்திரம் படைத்த முதல் மனிதர் இவர் என்று கூறலாம்.
அப்போது இந்தியர்களுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனைகள் ஆங்கிலேயர்களின் போக்கை உணர்த்தும் . இரண்டு கூலிகள் ஒரு கள்ள நாணயத்தை
வைத்திருந்ததற்காக கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
இவ்வழக்கில், குற்றவாளிகளை வண்டியில் கட்டி வைத்து கருப்பு டவுன் சுற்றிலும் எல்லா வீதிகளிலும் அழைத்துச் சென்று, அவ்வாறு வருகையில் ,சாட்டையால்
தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அடிக்க வேண்டும். ஊரெல்லைக்குள் அவர்கள் மீண்டும் வருவது தடை செய்யப்பட்டது. அப்படி வந்தால் அவர்கள் காது வெட்டப்பட
வேண்டும், எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு வழக்கில் இரண்டு பியூன்கள், மரத்தில் கட்டப்பட்டு, அவர்கள் காதுகள் துண்டிக்கப்பட்டன. இந்தியர்களைப்
பொருத்தமட்டில் நீதிமுறையும், தண்டனையும் காட்டுமிராண்டித்தனமாகத்தான் இருந்திருக்கிறது.
சில படகோட்டிகள் துணி மூட்டைகளிலிருந்து துணிகளைத் திருடியதாகப் பிடிபட்டனர். அவர்களுக்கும் இதே போன்றே தண்டனைகள் வழங்கப்பட்டன. ஆனால்,
இவர்கள் அபராதம் செலுத்துவதாக வாக்களித்த பிறகு ஆறு மாத சிறைக்குப் பின் விடுவிக்கப்பட்டனர்.
இந்தியர்களுக்கு அளிக்கப்பட்ட நியாயம், தீர்ப்பு ஆகியவைகள் ஆங்கிலேயர்களுக்கு அளிக்கப்பட்டதை விட மாறுபட்டிருந்தது. ஆங்கிலேயர்கள் இந்தியர்களை
தமக்குச் சமமானவர்களாக க் கருதவில்லை என்பது வெளிப்படை. அவர்கள் இந்தியர்கள் பலரை நம்பத் தகுந்தவர்களாக ஏற்றுக் கொள்ளவுமில்லை.
18 பாலங்கள்
-------------
செயின்ட் ஜார்ஜ் பாலம், பேசின் பாலம், லூயிஸ் பாலம், பெரியார் பாலம் உள்ளிட்ட 18 பாலங்கள் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டன. சென்னை நகரில் சுமார்
200 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட பாலங்கள், இன்றும் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தளவுக்கு நன்கு திட்டமிட்டு ஆங்கிலேயர்
பாலங்களை அமைத்துள்ளனர்.
வெள்ளையர்களின் கருப்பு நகரம்
----------------------------------
1640 ல் “தொழிற்சாலை’ என்று அழைக்கப்பட்ட தங்கும் வசதி கொண்ட கிடங்கு ஒன்றை
ஆங்கிலேயர்கள் கட்டினார்கள். அதுதான் பின்னாளில் புனித ஜார்ஜ் கோட்டை என்று பெயரிடப்பட்டது.
இக் கோட்டையின் வடக்குப் பகுதியில் ஓர் இந்திய நகரம் உருவாக்கப்பட்டது. கருப்பு நகரம் (முத்தியால் பேட்டையும் பெத்தநாயக்கன் பேட்டையும் இணைந்தது)
என்று அழைக்கப்பட்ட இந்நகரில்தான் ஆரம்ப காலத்தில் கிழக்கிந்திய கம்பெனியுடன் வணிகம் செய்த வணிகர்கள் வாழ்ந்து வந்தனர்.
பிரிட்டிஷாருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் நடந்த பல போர்களில் இந்தப் பகுதி முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இந்த நகரம்தான் பின்னாளில் ஜார்ஜ் டவுன் என்று
பெயர் பெற்றது. இந்தியாவுக்கு வந்த மன்னர் ஜார்ஜ் நினைவால் இந்தப் பெயர் வைக்கப்பட்டது.
புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடம் வாழ்வதற்கு சவுகர்யமற்றது. இப்பகுதியில் கடல் சீற்றம் மிகுந்து காணப்படும். இங்கு எங்கு தோண்டினாலும் உப்பு
நீர்தான் கிடைக்கும். அன்று கோட்டைக்குள்ளும் வெள்ளை டவுனிலும் இருந்த ஆங்கிலேயர்களுக்கு பெத்தநாயக்கன் பேட்டையிலிருந்து மாட்டு வண்டிகளிலும்
தலை சுமையாகவும் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.
1722 ல் கேப்டன் பேகர் என்பவர் வகுத்துக் கொடுத்த “ஏழு கிணறு தண்ணீர் திட்டத்’<<<<<<தின்படி கோட்டையிலிருந்து இரண்டு மைல் தூரத்திலும்
கடற்கரையிலிருந்து ஒரு மைல் தூரத்திலும் பெத்தநாயக்கன்பேட்டைக்கு வடக்கில் நல்ல தண்ணீருக்காக 7 கிணறுகள் வெட்டப்பட்டன. ஏழு கிணறுகள் என்று
அழைக்கப்பட்டாலும் அங்கு பத்து கிணறுகள் வெட்டப்பட்டன. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அந்தக் கிணறுகள் நீர் தந்து கொண்டு இருந்தன.
ஜார்ஜ் டவுனுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டி, 1700 ல் ஆங்கிலேய மேலாண்மையால் சில பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஏழு ஆண்டுகள் நடந்த
முடிந்த பணியில் 17 அடிகள் அகலத்துக்கு சுற்றிலும் பாதுகாப்புச் சுவர் கட்டப்பட்டது. அதன் மேல்பகுதியில் பீரங்கிகள் வைக்க சுவர் ஏதுவானதாய் இருந்தது.
இதற்கு உண்டான செலவை பொதுமக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பியது அரசாங்கம்.
அதற்காக கவர்னர் பிட் அனைத்து ஜாதியினரையும் அழைத்துப் பேசி ஜாதி அடிப்படையில் எவ்வளவு கொடுக்க வேண்டுமென பட்டியலிடப்பட்டது.
மைசூர் ஹைதர் அலி, 18 ம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் வலிமை மிகுந்த அரசனாக இருந்த நிலையில், அவ்வரசரின் படை சாந்தோமையும்,
மதராசபட்டினத்துச் சுற்றுப்புற இடங்களையும் 1767 ல் தாக்கியது. அத்துடன் அப்படையினர் அங்கிருந்த இடங்களையும் கோயில்களையும் சூறையாடியதைக் கண்டு
ஜார்ஜ் டவுன் மக்கள் பீதியடைந்தனர். இதனால், வட பகுதியையும், மேற்குப் பகுதியையும் பாதுகாக்க மூன்றரை மைல் தூரத்துக்கு பாதுகாப்புச் சுவர்கள் கட்டப்பட
வேண்டியிருந்தது.
எனவே, வெளியார் தாக்குதலின்றி இவ்விடத்தைக் காக்க வேண்டிய பாதுகாப்புக்காக கஜானாவிலிருந்து வேண்டிய முன்பணம் தரவும் அரசு முடிவு செய்தது. அந்த
முன்பணத்தை வரி மூலம் வசூலிப்பதற்காக ஹென்றி புரூக் என்பவர் கலெக்டராக நியமிக்கப்பட்டு, அவர் கோடை வரி வசூலிக்கும் கலெக்டர் என்று
அறியப்பட்டார்.
இதன்படி சுவர் கட்டுவதற்கான செலவும், பாதுகாப்புச் செலவும் 12 வருடங்களில் திரும்பிப் பெற முடியும் எனவும் கூறப்பட்டது. (இப்படி சுற்றி அமைக்கப்பட்ட
சுவரின் உள் பகுதிதான் இன்றும் வால்டேக்ஸ் ரோடு என்று அழைக்கப்படுகிறது)
இத்திட்டத்தின்படி , பீரங்கிகள் வைக்க ஏதுவாக கொத்தளங்கள் அமைக்கப்பட்டன. வடபுறச்சுவர் சற்றே வளைந்து, தண்டையார்பேட்டையை நோக்கியிருந்தது.
சுற்றுச்சுவர், கோக்ரேன் கால்வாயான வடக்கு ஆற்றை ஒட்டியிருந்தது. சுவர்களின் வெளிப்புறங்கள், பீரங்கி வைத்துச் சுட ஏதுவாகக் கட்டப்பட்டிருந்தன. அவை நல்ல
அகலமாக, நடப்பதற்கு ஏற்றவையாக இருந்ததால் அவை “எஸ்பிளனேடுகள்’ என்று அழைக்கப்பட்டன.
தென்பகுதி 19 -ம் நூற்றாண்டின் மத்தியில், “பீப்பிள்ஸ் பார்க்’ ஆக்கப்பட்டது. அந்த சுவர்களில் பல தலைவாயில்கள் இருந்தன. அப்போது “எலிபென்ட் கேட்’ என்று
அழைக்கப்பட்ட தலைவாயில் இருந்த இடம் இப்போது வாயிலில்லாது போனாலும் அப்பெயராலேயே அழைக்கப்படுகிறது.
ஆனால், முன்னர் திட்டமிட்டபடி ஆங்கிலேய மேலாண்மையால் வரி வசூலிக்க முடியவில்லை. அதற்குக் காரணம் வங்காளத்திலிருந்து வந்த கடிதமொன்றுதான்
என்றும், கோட்டைக்கு வரி வசூலிக்கும் அதிகாரம் கம்பெனிக்குக் கிடையாதென்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக அப்போதைய கவர்னர் ட்யூ ப்ரே
தெரிவித்திருக்கிறார். இதனால், இங்கிலாந்தின் அனுமதியின்றி வரி வசூலிக்க முடியாததாயிற்று.
1640 ல் இந்தியாவில் தங்கிவிட்ட போர்த்துகீசியர்களால் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் தேவாலயமான “அஷம்சன் ஆப் அவர் லேடி சர்ச்’ மின்ட் அருகில்
கட்டப்பட்டது. இச் சாலை போர்த்துகீசிய சாலை என்றே அழைக்கப்படுகிறது.
கேசவ பெருமாள் கோயில், மல்லீசுவரர் கோயில், கந்தசாமி கோயில் என ஜார்ஜ் டவுனின் ஒவ்வொரு வீதியும் ஒரு கோயிலையும் அதன்பின்னே ஒரு
கதையையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
ஆர்மேனியர்கள் இங்கு தங்கி வணிகம் செய்ததன் அடையாளமாக ஆர்மேரியன் வீதி என்றும் அவர்களது தேவாலயம் ஆர்மேனியன் சர்ச் என்றும்
அழைக்கப்படுகிறது.
1862 ல் ராணி விக்டோரியா பிறப்பித்த கடித உரிமத்தின் மூலம் மெட்ராஸ் உயர்நீதி மன்றம் தொடங்கப்பட்டது.
1788 ல் இந்தியாவுக்கு வந்த வணிகர் தாமஸ் பாரியின் நினைவாக பாரி முனை என்று பெயர் வைக்கப்பட்டது.
“மாமரங்கள், தென்னை மரங்கள், கொய்யா மரங்கள் என பல்வேறு மரங்கள் நடப்பட்டிருந்தன... அங்கு யாரும் சுதந்திரமாக நடக்கவும் மலிவான விலையில்
பழங்களை வாங்கவும் முடிந்தது ...’ என ஜார்ஜ் டவுனின் அகலமான வீதிகளையும் கணக்கற்ற தோட்டங்களையும் பற்றி 1739 ல் ஒரு பிரிட்டிஷ் எழுத்தாளர்
விவரித்திருக்கிறார்.
பென்ஸ் கார்டன்
-----------------
1800ம் ஆண்டில் ஜான் டி மான்டி என்ற போர்த்துகீசிய வணிகர் சென்னைக்கு வந்தார். இந்தியாவில் அவர் மிகச்சிறந்த வணிகராக உயர்ந்தார். அவர் சென்னையில்
மவுபிரே கார்டனுக்கு அருகில் 105 ஏக்கர் பரப்பளவில் ஒரு இடத்தை வாங்கினார். அங்கு தான் பென்ஸ் கார்டன் அமைக்கப்பட்டது. அந்த கட்டடம் தற்பொழுது
அடையாறு ஆற்றுக்கு அருகில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலையில் அமைந்துள்ளது.
அந்த இடத்தில் அறக்கட்டளை அமைப்புகள், பள்ளிகள் ஆகியவற்றை ஜான் டி மான்டி தோற்றுவித்தார். பிற்காலத்தில் அந்த இடம் பல பாகங்களாக பிரிக்கப்பட்டது.
அந்த இடத்தில் பாதிக்கு மேலாக, தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுவிட்டது. எஞ்சியுள்ள இடத்தில் நான்கு கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த
கட்டடங்கள் தற்பொழுது அரசின் பயணியர் விடுதியாக செயல்பட்டு வருகிறது.
இந்த இடத்தில் முதன்முதலில் கட்டப்பட்ட பழமையான கட்டடம் தான் பென்ஸ் கார்டன் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. மீதம் இருந்த இடங்களில் கார்
தயாரிப்பு தொழிற்சாலை மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் என பென்ஸ் கார்டன் தற்போது அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளது.
சுல்லிவன் கார்டன்ஸ்
----------------------
1780ம் ஆண்டு அட்டர்னி ஜெர்னலாக இருந்தவர் பெஞ்சமின் சுல்லிவன், பின்னர் அவர் நீதிபதியாகவும் பணியாற்றினார். அவரால் கட்டப்பட்டது தான் சுல்லிவன்
கார்டன்.
1840ம் ஆண்டு அப்போதைய சென்னை கமிட்டியால் கல்லூரி மற்றும் பள்ளிகள் கட்டுவதற்கு 20 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அந்த நிதியில் சுல்லிவன்
கார்டனில் செயின்ட் எப்பாஸ் பள்ளி 1886ம் ஆண்டு கட்டப்பட்டது. சென்னை நகர வளர்ச்சியை கருத்தில் கொண்டு சுல்லிவன் கார்டனின் பெரும் பகுதி விற்பனை
செய்யப்பட்டது. அந்த பகுதி சாலைக்கு சுல்லிவன் கார்டன் சாலை என பெயரிடப்பட்டது.
விற்பனை செய்யப்பட்ட பகுதி சிவசுவாமி அய்யர் என்பவரால் வாங்கப்பட்டது. அந்த இடத்தில் அய்யர் சுதர்மா என்ற மேன்ஷனை கட்டினார். பின்னர் அதை
அனந்தராமகிருஷ்ணன் என்பவர் வாங்கி வியாபாரத்துக்காக பயன்படுத்தினார். பின்னர் சுல்லிவன் கார்டன் சாலைக்கு சிவசுவாமி அய்யர் சாலை என பெயர்
மாற்றம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் ஆரம்பிக்கப்பட்ட செயின்ட் எப்பாஸ் பள்ளி இன்றும் நடந்து வருகிறது. பள்ளியின் பழமையான கட்டடம் சிறிய அளவில்
மாற்றம் செய்யப்பட்டு தற்பொழுது புதுப்பொலிவுடன் செயல்பட்டு வருகிறது.
மவுண்ட் ரோடு
---------------
சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளுக்கும் மகுடமாக விளங்குவது மவுண்ட் ரோடு என்று முன்பு அழைக்கப்பட்ட, தற்போதைய அண்ணா சாலை.
ஆங்கிலேயர்களது ஆட்சிக் காலத்தில், புனித ஜார்ஜ் கோட்டை அருகே கூவம் ஆறு முதல் பரங்கிமலை (செயின்ட் தாமஸ் மவுண்ட்) வரையிலான 15 கி.மீ.,
தொலைவில் நீண்ட சாலை அமைக்கப்பட்டு, மவுண்ட் ரோடு எனப் பெயரிடப்பட்டது. இது தற்போது மாநகரின் வணிக மையமாகவும், முக்கிய அரசு
அலுவலகங்களை கொண்ட பிரதான மையமாகவும் விளங்குவது அனைவரும் அறிந்ததே.
மறைந்த முதல்வர் அண்ணாதுரை நினைவாக இந்த சாலை, அண்ணா சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சிந்தாதிரிப் பேட்டை, புதுப்பேட்டை, எழும்பூர்,
ராயப்பேட்டை, சேப்பாக்கம், எல்லீஸ் சாலை, ஆயிரம் விளக்கு ஆகிய பகுதிகள் அன்றைய கால மவுண்ட் ரோட்டுடன் இணைந்த 200 ஆண்டுகால வரலாற்றை
கொண்டுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப இரண்டு முக்கிய மற்றும் பெரிய பாலங்களை கொண்டுள்ள தற்போதைய அண்ணா சாலை தீவுத்திடம் முதல் கிண்டி வரையில்
சற்று சுருங்கியுள்ளது. அண்ணா சாலைக்கு அடையாளம் தரும் வகையில் எல்.ஐ.சி., கட்டடம் அமைந்துள்ளது.
நான்கு கலங்கரை விளக்கங்கள்
--------------------------------
சென்னையில் எத்தனை கலங்கரை விளக்கம் இருக்கிறது என்று கேட்டால் அதிக பேருடைய பதில் மெரினா கலங்கரை விளக்கம் ஒன்று தான். ஆனால்
சென்னையில் நான்கு கலங்கரை விளக்கம் இருக்கிறது. முதல் கலங்கரை விளக்கம் (1796) துறைமுகத்தில் உள்ள மியூசியத்தில் உள்ளது. இரண்டாவது (1844)
மற்றும் மூன்றாவது கலங்கரை விளக்கம் (1894) ஐகோர்ட் கட்டடத்தில் உள்ளது. நான்காவது தான் மெரினா (1977).
No comments:
Post a Comment