சென்னை, செப்.14: எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு சம்பளம் மற்றும் படிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து சட்டப் பேரவையில் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு: உறுப்பினர்கள் சிலர் தங்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் படிகளை அதிகரித்து வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார்கள். உறுப்பினர்களின் கோரிக்கையின் அடிப்படையில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுதிப்படி 5,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்படும். இதன் மூலம், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான மொத்த மாதச் சம்பளம் மற்றும் படிகள் 50,000 ரூபாயிலிருந்து 55,000 ரூபாயாக உயரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும், அமைச்சர்கள், பேரவைத் தலைவர், பேரவைத் துணைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், அரசு தலைமை கொறடா ஆகியோருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுதிப்படி 5,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்படும். இதன் மூலம், அமைச்சர்கள் மற்றும் பேரவைத் தலைவருக்கான மொத்த மாதச் சம்பளம் மற்றும் படிகள் 27,000 ரூபாயிலிருந்து 32,000 ரூபாயாக உயரும் என்பதையும், பேரவைத் துணைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசு தலைமைக் கொறடா ஆகியோருக்கான மொத்த மாதச் சம்பளம் மற்றும் படிகள் 26,500 ரூபாயிலிருந்து 31,500 ரூபாயாக உயரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உயர்வின் மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1 கோடியே 41 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.இதே போன்று, சட்டமன்றப் பேரவை , மேலவை முன்னாள் உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்பட வேண்டும் என்று சட்டமன்றப் பேரவை , மேலவை முன்னாள் உறுப்பினர்கள் நலச் சங்கத்திலிருந்து கோரிக்கைகள் வரப் பெற்றுள்ளன. அவர்களது கோரிக்கையினையும் ஏற்று சட்டமன்றப் பேரவை, மேலவை உறுப்பினர்களுக்கான மாத ஓய்வூதியம் 10,000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாக உயர்த்தப்படும். இதன் மூலம் அரசுக்கு 2 கோடியே 40 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். சட்டமன்றப் பேரவை, மேலவை முன்னாள் உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் 12,000 ரூபாயாக உயர்த்தப்படுவதை அடுத்து, மறைந்த சட்டமன்றப் பேரவை , மேலவை உறுப்பினர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் 5,000 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாக உயரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதனால், அரசுக்கு ஆண்டொன்றுக்கு 47 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். மேற்படி உயர்வு 1.9.2011 முதல் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உயர்வினால் ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 4 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என முதலவர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment