Friday, December 30, 2011

அதிர்ஷ்ட கற்களைப் பரிசோதனை செய்யும் எளிய முறை

அதிர்ஷ்ட கற்கள் என்று சொல்லப்படுபவைகள் நவரத்தினக் கற்களே ஆகும்.  மாணிக்கம், முத்து, பவளம், மரகதம், புஷ்பராகம்,  வைரம் நீலம், கோமேதகம், வைடூயம் ஆகிய கற்களை நவக்கிரகங்களின் அம்சமாக வேதங்கள் சொல்லுகின்றன.   எனவே வேதகாலத்தில் இருந்தே கிரகங்களின் பரிகாரத்திற்காக நவரத்தினங்கள் பயன்படுத்தப்பட்டு வந்த இருப்பதை அறிய முடிகிறது.

  ரத்தினங்களைப் பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன.  அவைகளில் மிக முக்கிய சிக்கல் ரத்தினங்கள் நல்லதா, போலியானதா என்பதைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் பலரிடம் இல்லாததே ஆகும்.  இதைப் பயன்படுததி போலி ரத்தினங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.  எனவே ரத்தினங்ளைப் பரிசோதனை செய்யும் எளிய முறையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.


  மாணிக்கம் கல்லை பாலில் போட்டால் பாலில் சிவப்பு நிறம் படரவேண்டும்.  நுரையுள்ள பாலில் முத்தைப் போட்டால் அது மிதக்க வேண்டும்.  பவளம் பாலில் விழுந்தவுடன் பால் சிவப்பாக மாறவேண்டும்.  நல்ல மரகதத்தை குதிரையின் மூக்கின் அருகே கொண்டு சென்றால் அது தும்ம வேண்டும். 

  சந்தனம் அரைக்கும் கல்லின் மீது புஷ்ப ராகத்தை வைத்தால் தாமரைப் பூவின் வாசம் வரவேண்டும்.  வைரத்தின் கீழ் பகுதியின் விரல் வைத்தால் விரலில் பிம்பம் மேல்புறத்தில் தெரியக்கூடாது.  பசும்பாலில் நீலக்கல்லைப் போட்டால் பால் நீல நிறமாக மாறவேண்டும்.    

  பசும் பாலில் கோமேகத்தைப் போட்டால் பால் கோமியத்தின் வண்ணத்தைப் பெறவேண்டும்.  இருட்டில் வைடூயத்தை வைத்தால் அது பூனைக்கண் போல் ஜொலிக்க வேண்டும்.  


  அடுத்த சிக்கல் இயற்கை ரத்தினங்களை வாங்குவதா, செயற்கை ரத்தினங்கள் வாங்குவதா என்பது தான் அது.  இயற்கை ரத்தினங்கள் அணிவது தான் நியாயப்படி சரியான பரிகாரம் ஆகும். 

  ஆனால் அதன் விலை அதிகம் என்பதால் சாதாரண மனிதர்கள் வாங்க இயலாது.  அதனால் செயற்கை ரத்தினங்களை அணிந்து கொள்ளலாம். என சிலர் சொல்கிறார்கள் ஆனால் அது முழுமையான பலனை தராது  ஓரளவு பலன் தரும்.  ரத்தினக் கல் பரிகாரம் என்பது ஜாதகப்படி கிரக நிலைகள் நல்லவிதமாக அமைந்திருக்கும் நாளில் செய்வதால் தான் நல்ல பலனைத் தரும் அல்லது பலன் தராது.  தீய விளைவுகளைக் கூட ஏற்படுத்தி விடலாம்


கோடிஸ்வரனை ஆண்டி ஆக்கும் யோகம்

யோகங்கள் என்றவுடன் அதிர்ஷ்டமான  அமைப்பு என்று கருதினால் அது தவறாகும். ஜோதிட பரிபாஷையில் யோகங்கள் என்ற வார்த்தை ஒரு கிரகத்திற்கும் இன்னொரு கிரகத்திற்கும் தொடர்பை குறிக்கும் குறியிட்டு வார்த்தை தான். இந்த வார்த்தை தனித்தனி கிரகங்களோடு சம்பந்தப்படும் போது பலவித அர்த்தங்களைத் தருகிறது. அப்படி அர்த்தங்களைத் தரும் ஜாதக யோகங்கள் 300க்கும் மேல் இருக்கிறது. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

சந்திரன் சம்பந்தப்பட்ட யோகங்கள்:

      முதலில் சந்திரனோடு மற்ற கிரகங்கள் சம்பந்தப்படும் போது ஏற்படும் யோகங்களைக் கவனிப்போம்.  ஒரு ஜாதகத்தில் சந்திரனுக்கு முன்னும் பின்னும் சூரியன், ராகு, கேது தவிர வேறு கிரகங்கள் இருந்தால் அது துருதரா யோகம் எனப்படும்.  இந்த யோகம் ஜாதகனுக்கு நல்ல உறவையும் நல்ல குணத்தையும் வாகன சுகத்தையும் கொடுக்கும்.

  அதேபோல சந்தினுக்கு 12வது இடத்தில் ராகு கேதுக்களைத் தவிர வேறு கிரகங்கள் இருந்தால் அநபா யோகம் எனப்படும்.  இந்த யோகம் ஆரோக்கியத்தையும், பெயர் புகழையும் தரும்.

  சந்திரனுக்கு 2ம் இடத்தில் சூரியன், ராகு, கேதுக்களைத் தவிர வேறு கிரகங்கள் இருந்தால் அது சுநபா யோகம் எனப்படும்.  இந்த யோகம் சாதாரண மனிதனை உழைப்பின் மூலமாக உயர்த்தி அரசனுக்குச் சமமாக ஆக்கிவிடும்.


   சந்திரனுக்கு முன்னும் பின்னும் கிரகங்கள் எதுவும் இல்லாது அது கேமத்துருமம் என்னும் யோகமாகும்.  இந்த யோகம் ஒரு ஜாதகத்தில் இருந்தால் அவன் கோடீஸ்வரனாகப் பிறந்தாலும் சாவதற்குள் அவனைப் பிச்சைக்காரனாக நடுவீதியில் நிறுத்திவிடும்.

  சந்திரனுக்கு 1, 4, 7, 10 ஆகிய ஸ்தானங்களில் குரு இருந்தால் அது கஜகேச யோகமாகும்.  இந்த யோகம் தீர்க்காயுளையும், புகழையும், பண வருவாயையும், வாகன சுகத்தையும் கொடுக்கும்.

 ஜாதகத்தில் சந்திரனும் செவ்வாயும் சேர்ந்திருந்தால் அது சந்திர மங்கள யோகமாகும்.  இந்த யோகம் அசையாத சொத்துக்களை அதிகமாகத் தரும்.  அதேநேரம் இக்கிரகங்களை அசுப கிரகம் ஏதாவது ஒன்று பார்த்தால் ஜாதகனுக்குச் சொத்துக்களைக் கொடுத்து மூளைக் கோளாறைத் தரும்.

 சந்திரனுக்கு 8, (அ) 12ல் குரு இருந்தால் அது சகடயோகமாகும்.  இந்த யோகத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை நிலையில்லாமல் சக்கரம் போல் மேலும் கீழும் சுற்றிக் கொண்டே இருக்கும்.


 சூரியன் சம்பந்தப்பட்ட யோகங்கள்:

  சூரியனுக்கு 2ல் சந்திரன், ராகு, கேது, தவிர, வேறு கிரகங்கள் இருந்தால் அது வேசி யோகம் எனப்படும்.  இந்த யோகத்தோடு பிறந்த ஆண் ஆனாலும் பெண் ஆனாலும் சுய கௌரவத்தை இழந்து பணம் மற்றும் சொத்துக்களைப் பெறுவார்கள்.

  சூரியனுக்கு 12ல் ராகு, கேதுக்களைத் தவிர மற்ற கிரகங்கள் இருந்தால் அது வாசியோகமாகும்.  இந்த யோகம் பெரும் புகழை ஜாதகன் பெறும்படிச் செய்யும்.  சூரியன் இருக்கும் ராசிக்கு இரு பக்கங்களிலும் எந்தக் கிரகம் இருந்தாலும் அது சுய உபயசாரி யோகம் எனப்படும்.  இது நல்ல வருவாயையும புகழையும் ஈட்டித்தரும்.

  ஜோதிடப்படி மிகச்சிறந்த யோகம் கஜகேசரி யோகமாகும் குரு உச்சம் பெற்ற ஜாதகருக்கு மட்டுமே அமையும்

  இவைகள் தவிர பத்ரயோகம், ரூசக யோகம், கசயோகம், ஹம்ச யோகம், மாலவ்ய யோகம் என்று பஞ்சமகா புருஷ யோகங்கள்  உள்ளன இந்த யோகங்கள் எல்லாமே ஜாதகத்தில் கிரக நிலைகள்  நல்லபடி அமைந்திருந்தால் மட்டுமே முழுமையான பலன்களைத் தரும்.  இப்படி அமையாவிட்டால் அரைப்பாகம், கால்பாகம் என்று தான் பலன்களைத் தரும்.


Thursday, December 29, 2011

அரசமரத்தடி விநாயகர் அதிக சக்தி வாய்ந்தவரா? கணபதியின் திருநாமங்கள் எத்தனை?

                                                                           
ரச மரத்தடி விநாயகர் மட்டுமல்ல அரசமரமே சக்தி வாய்ந்தது தான்.  பெரியவர்கள் பஞ்சாயத்து பேசுவதற்கும் சிறியவர்கள் பம்பரம் விளையாடுவதற்கு மட்டுமே அரசமர நிழல் பயன்படுவதாக நினைப்பது தவறு.  சித்திரை, வைகாசி போன்ற மாதங்களில் மதிய நேரம் அந்த நிழலில் இளைப்பாறினாலே தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.  இருக்கும் நோய் கூட வீரியம் குறையும். 

அரசமர காற்றிலிருக்கும் ஒரு வித மருத்துவ தன்மை கருப்பையில் கருதங்காது இருக்கும் நிலையை மாற்றுகிறது.  கண்ணை மூடி தியானம் செய்தால் மனம் குவியவில்லை எங்கெங்கோ அலைபாயுகிறது என கஷ்டப்படுபவர்கள் அரச மரத்தடியில் தியானம் செய்ய பழகுவார்களானால் சீக்கிரம் மனம் குவிந்து விடுவதை உணருவார்கள்.  

    புத்தனுக்கு ஞானம் தந்த போதிமரம் அரச மரம் தான் என்பதை நினைவில் கொண்டால் அதன் மகத்துவம் என்னவென்று எளிதாக தெரியும்.  மரத்திற்கே இத்தகைய சக்தி என்றால் அதன் அடியில் இருக்கும் மூர்த்தியின் சக்தியை பற்றி சொல்லவே வேண்டாம்.  பிரபஞ்சத்தில் இருக்கும் பிரனவ சக்தியானது மிக சுலபமாக அரசமரத்தடி விநாயகரால் ஈர்த்து பக்தர்களுக்கு வழங்க முடியும். அதனால் தினசரி அரச மரத்தடி தொப்பை கணபதிக்கு தோப்புகரணம் போட்டு உடலை ஆரோக்கிய படுத்தி கொள்ளுங்கள்  

     எல்லா தெய்வங்களுக்கும் பக்தர்கள் தங்களது விருப்படி ஆயிரமாயிரம் பெயர்களை சூட்டி மகிழ்வது இயற்கை.  அதனால் தான் ஓர் நாமம், ஓர் உருவம், இல்லாதவர்க்கு ஆயிரம் திருநாமம், ஆயிரம் உருவம் என்று நமது முன்னோர்கள் சொன்னார்கள். 

   எத்தனை பெயர் சூட்டினாலும் சிறப்பித்து சொல்லப்படுவது சிலப்பெயர்களை மட்டும் தான்.  அதே போல பிள்ளையாருக்கு    ஏகதந்தர் ,சுமூகர், கஜகர்னர், கபிலர், லம்போதரர், விகடர், விநாயகர், விக்கன ராஜர், தூமகேது, கணத்தச்சர், கஜானனர், பால சந்திரர் என்று பன்னிரெண்டு திருநாமங்கள் சிறப்பாக சொல்லப்படுகிறது.

Wednesday, December 28, 2011

நொறுக்கு தீனி பிடிக்குமா உயிரணு பாதிப்பு வரலாம்


மேட்ரிட் : டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பு அதிகமுள்ள நொறுக்கு தீனிகளை சாப்பிடும் இளைஞர்களுக்கு விந்தணு பாதிப்பு ஏற்படக்கூடும் என்று அமெரிக்கா, ஸ்பெயின் நாடுகளின் ஆராய்ச்சி எச்சரிக்கிறது. இதுகுறித்து ஹார்வேர்டு பல்கலைக்கழகம், ஸ்பெயினின் முர்சியா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் வெளியான தகவல் வருமாறு:

ஊட்டச் சத்து உணவை சாப்பிட்டு வந்த 18 முதல் 22 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களைவிட ஜங்க் புட் எனப்படும் நொறுக்கு தீனி, சாட் வகைகளை அதிகம் சாப்பிட்டு வந்த இளைஞர்களுக்கு உயிரணு எண்ணிக்கை குறைந்தது ஆய்வில் தெரிய வந்தது. நொறுக்கு தீனி, சாட் வகைகளை தொடாத இளைஞர்களைவிட அவற்றை சாப்பிடும் இளைஞர்களில் உயிரணுக்கள் சரியாக இருந்தவர்களுக்கும் அவற்றின் ஊர்ந்து சென்று கரு உண்டாக்கும் வேகம் (மொபிலிடி) குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சரியான உடல் எடை, உடற்பயிற்சி பழக்கத்துடன் இருந்தவர்களிடமும் இது ஏற்பட்டது தெரிந்தது.

இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டது. இதே விஷயத்தில் ஜப்பானில் நடந்த ஆய்வும் இதையே தெரிவித்துள்ளது. 215 இளைஞர்களிடம் நடந்த சோதனைகளில் இது நிரூபணமானது. இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பு அதிகமுள்ள கேக், பீட்சா, பர்கர், சாக்கோ டிரிங்க், சிப்ஸ், கேண்டி ஆகியவற்றை அதிகம் சாப்பிடும் இளைஞர்களுக்கு உயிரணு எண்ணிக்கை பாதிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டது. தினசரி உணவில் 2 கிராம் டிரான்ஸ் ஃபேட் போதுமானது. ஆனால், இந்த நொறுக்கு தீனி, சாட் வகைகளில் அவை கூடுதலாக இருப்பது இளைஞர்களிடம் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Friday, December 23, 2011

சூரிய மண்டலத்துக்கு வெளியே பூமி அளவில் 2 புதிய கிரகங்கள்!

நியூயார்க் : சூரிய மண்டலத்துக்கு வெளியே பூமி அளவில் 2 புதிய கிரகங்கள் இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ‘நாசா’ நேற்று அறிவித்தது. இதுகுறித்து ‘நாசா’ வெளியிட்ட அறிக்கை வருமாறு: விண்வெளியில் உயிரினங்கள் வசிக்க சாத்தியமுள்ள புதிய கிரகங்கள் குறித்து, கெப்ளர் என்ற வரிசையில் பெயரிட்டு, நாசா ஆராய்ந்து வருகிறது. அதில் புதிதாக 2 கிரகங்கள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூமி உட்பட 9 கிரகங்கள் சுற்றி வரும் சூரிய மண்டலத்துக்கு வெளியே இந்த புதிய கிரகங்கள் இருக்கின்றன. சூரியனை போன்ற பெரிய நட்சத்திரத்தை இவை சுற்றி வருகின்றன. இரண்டு கிரகங்களும் பூமியின் அளவில் இருக்கின்றன.

அவற்றுக்கு கெப்ளர்&20இ, கெப்ளர்&20எப் என்று பெயரிடப்பட்டுள்ளது. சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்கள் இடையே உள்ள இடைவெளியைப் போல இல்லாமல், புதிய கிரகங்கள், பெரிய நட்சத்திரத்தின் மிக அருகே இருக்கின்றன. அங்கு திரவ நிலையில் தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளது. பூமியைப் போன்ற புதிய கிரகங்கள் பற்றிய ஆராய்ச்சியில் இந்த கண்டுபிடிப்பு ஒரு முக்கிய மைல்கல். கெப்ளர் &20இ, கெப்ளர் &20எப் ஆகியவை முழுவதும் பாறைகளால் ஆனதாக இருக்கலாம்.

முதல் கிரகம் பூமியின் அளவிலும், கெப்ளர் &20எப் பூமியை விட சிறிது பெரிதாகவும் உள்ளன. நட்சத்திரத்தை கெப்ளர் &20இ கிரகம் 6.1 ஒரு நாளில் சுற்றி வருகிறது. கெப்ளர் &20எப், 19.6 நாட்களில் சுற்றி வருகிறது. இவ்வளவு குறைந்த காலத்தில் அதிக வெப்பம் கொண்ட நட்சத்திரத்தின் அருகில் இருந்து சுற்றுவதால் அதிக வெப்பநிலை காரணமாக இந்த கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமாகாது.

கெப்ளர் &20இ கிரகத்தின் வெப்பநிலை 1,400 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் இருக்கும். கெப்ளர் &20எப் வெப்பநிலை 800 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும்.
இவை வசிக்க தகுதியற்றதாக இருந்தாலும், பூமியை போல உயிர்கள் வசிக்க சாத்தியமுள்ள கிரகங்களை ஆராயும் கெப்ளர் திட்டத்தில் பூமி அளவில் 2 கிரகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது முதல்முறை. இவ்வாறு நாசா அறிக்கை தெரிவிக்கிறது.

Wednesday, December 21, 2011

சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க..

நளன்கதை: இன்று சனிப்பெயர்ச்சி. இந்நாளில் நளனின் சரித்திரத்தைப் படித்தால் சனியினால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து மீளலாம் என சனிபகவானே அருளியிருக்கிறார்.
ஆகுகன், ஆகுகி என்ற வேட தம்பதியர் காட்டிலுள்ள குகை ஒன்றில் வசித்தனர். அவ்வழியே வந்த துறவி ஒருவரை அவர்கள் உபசரித்தனர். இரவாகி விட்டதால், குகைக்குள் துறவியும், ஆகுகியும் தங்கினர். அதில் இருவர் தான் தங்க முடியும் என்பதால் வேடன் வெளியில் தூங்கி னான். தன் மனைவி ஒரு ஆணுடன் தங்கியிருக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை. தன் மீது நம்பிக்கை வைத்த வேடனை முனிவர் பாராட்டினார். அயர்ந்து உறங்கிய வேடனை ஒரு மிருகம் கொன்று விட்டது. விஷயமறிந்த ஆகுகியும் உயிர் துறந்தாள். சுயநலமில்லாத இத்தம்பதியர் மறுபிறவியில் நள தமயந்தியாகப் பிறந்தனர். துறவி அன்னப்பறவையாக பிறந்தார். நளன் நிடதநாட்டின் மன்னராக இருந்தான். ஒருநாள் அன்னப்பறவையைக் கண்டான். நளனின் அழகைக் கண்ட பறவை, உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டு மன்னன் வீமனின் மகள் தமயந்தி தான். அவளை திருமணம் செய்து கொள். உனக்காக தூது சென்று வருகிறேன், என்றது. அன்னத்தின் பேச்சைக் கேட்ட தமயந்தி காதல் கொண்டாள். இதனிடையே சனீஸ்வரர் உள்ளிட்ட தேவர்கள் தமயந்தியை விரும்பினர். அவளின் சுயம்வரத்தில் அனைவரும் பங்கேற்றனர். எல்லாருமே நளனைப் போல் உருமாறி வந்தனர். நிஜ நளனும் வந்திருந்தான். புத்திசாலியான தமயந்தி உண்மையான நளனுக்கே மாலையிட்டாள். அவர்களுக்கு இந்திரசேனன், இந்திரசேனை என்ற குழந்தைகள் பிறந்தனர். தமயந்தியை பெற முடியாத தேவர்கள், சனீஸ்வரரிடம், நளனைப் பிடிக்கும்படி கூறினர். கடமை உணர்வு மிக்கவர்களை சனீஸ்வரர் ஏதும் செய்யமாட்டார். அதே நேரம், கடமையில் சிறுகுற்றம் இருந்தாலும் பொறுக்க மாட்டார். நளனோ நல்லாட்சி செய்தான். இப்படிப்பட்ட ஒருவனை அவரால் பிடிக்க முடியவில்லை. ஒருமுறை பூஜைக்கு தயாரான போது, சரியாகக் கால் கழுவவில்லை. ""இதைக் கூட சரியாக செய்யாத மன்னன் நாட்டை எப்படி ஆளமுடியும்? என கருதிய சனி, அவனைப் பிடித்து விட்டார்.
இதன் பின், புட்கரன் என்பவனிடம் சூதாடி பொன், பொருளை இழந்தான். குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினான். காட்டில் மனைவி,குழந்தைகள் படும் துன்பத்தைக் கண்ட நளன், ஒரு அந்தணர் மூலம் குழந்தைகளை தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பினான். பின், மனைவியையும் பிரிந்தான். நடுக்காட்டில் தவித்த அவளை, ஒரு மலைப்பாம்பு சுற்றியது. ஒரு வேடன் அவளைக் காப்பாற்றினான். ஆனால், அவள் மீது ஆசை கொண்டு விரட்டினான். தப்பித்த அவள், சேதிநாட்டை அடைந்து பணிப்பெண்ணாக இருந்தாள். ஒரு வழியாக அவளை, தமயந்தியின் தந்தை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார். தமயந்தியை பிரிந்த நளன், காட்டில் கார்கோடன் என்னும் பாம்பு கடித்து கருப்பாக மாறினான். அப்பாம்பு ஒரு அற்புத ஆடையை வழங்கிச் சென்றது. அழகு இழந்த அவன், அயோத்தி மன்னன் மன்னன் ரிதுபன்னனின் தேரோட்டியாக வேலை செய்தான். அவன் அங்கிருப்பதை அறிந்த தமயந்தி, நளனை வரவழைக்க தனக்கு மறுசுயம்வரம் நடப்பதாக அறிவித்தாள். ரிதுபன்னன் அதற்கு புறப்படவே, நளனும் வருத்தத்துடன் தேரோட்டியாக உடன் வந்தான். அப்போது, நளனைப் பிடித்த சனி நீங்கியது. தேரோட்டியாக இருந்த நளனையும், தமயந்தி அடையாளம் கண்டாள். நளன், கார்கோடன் அளித்த ஆடையை அணிந்து தன் அழகான சுயஉருவை மீண்டும் பெற்றான். திருநள்ளாறு என்னும் தலத்தை அடைந்தபோது, ஏழரைச்சனி நீங்கியது. சனீஸ்வரர் நளன் முன் தோன்றி, தன்னால் ஏற்பட்ட கஷ்டத்திற்குப் பரிகாரமாக வரம் தருவதாகக் கூறினார். ""சனீஸ்வரரே! நான் பட்ட கஷ்டம் யாருக்கும் நேரக்கூடாது. என் மனைவிபட்ட துன்பம் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. என் கதையை படிப்பவர்களை துன்புறுத்தக் கூடாது என வரம் கேட்டான். சனிபகவானும் அருள் புரிந்தார்.
நளன் கதை படித்த நீங்கள், உங்கள் கடமையைச் சரிவரச் செய்தால், சனி தோஷத்தில் இருந்து விடுபட்டு நல்வாழ்வு பெறுவீர்கள்.

Tuesday, December 20, 2011

சந்தோசம் வந்தால் சத்தம் போடு

லயங்களிலும், திருவிழா நாட்களிலும் பக்தர்கள் அரஹரா என்று கோஷம் போடுவது ஏன்? என்பது பலருக்கு புரிவதில்லை

மனிதனுக்கு துக்கம் வந்தாலும் சரி, சந்தோஷம் வந்தாலும் சரி, அதை வெளிபடுத்த பலவித ஒலிகளை பயன் படுத்துவான். மனிதன் என்று மட்டுமில்லை, விலங்குகளும் குறிப்பாக குரங்குகள் 162 வகை ஒலிகளை பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

பக்தி பெருக்கெடுத்து, உணர்ச்சி வெள்ளம் பொங்கி வழியும் போது தான் இந்த அரஹரா கோஷம் செய்யப்படுகிறது.

கோஷத்தை கேட்பவர்கள் கூட பக்தி உணர்ச்சிக்கு ஆட்படலாம்.

ஹர என்ற சொல் பாவங்களை போக்குதல் என்று பொருள்படும். ஹர ஓம் ஹர என்பது தான் மறுவி தமிழில் ஹரஹரா என்று அமைந்து இருக்கிறது. இந்த ஒலியை கூட்டமாக சேர்ந்து எழுப்புவதனால் மனமானது தூய்மையடைகிறது.

மூன்று மூர்த்தியும் ஒரே மூர்த்தியா...?

சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளின் வடிவம் முருகன் என்று சொல்கிறார்களே அது எப்படி?

     நமது தமிழ் புலவர்கள் எல்லாம் முருகு என்றால் அழகு என்று சொல்வார்கள்.  ஆறுமுகப் பெருமானின் அங்க லாவண்யத்தை அணு அணுவாக வர்ணித்து அனுபவித்த அருணகிரி நாதரும், முருகு என்ற வார்த்தையை பல முறை சொல்லி மெய்யுறுகி பாடுகிறார். 

  முருகு என்பது அழகை மட்டும் குறிக்கவில்லை.  அதில் உள்ள மு என்ற முதல் எழுத்து திருபாற் கடலில் அனந்த சயனத்தில் இருக்கும் நாரயணனின் திவ்ய நாமங்களில் ஒன்றான முகுந்தனை குறிக்கும்.  முகுந்து என்றால் காப்பவன் எனப்பொருளாகும்.  திருமால் காக்கும் கடவுள் தானே.  அதனால் முருகன் காக்கும் கடவுளாகவும் இருக்கிறான்.

     முருகுவில் அடுத்த எழுத்து ரு வாகும்.  இது சிவபெருமானுக்குரிய ருத்திரன் என்ற பெயரை குறிப்பதாகும்.  ருத்ரன் என்ற வார்த்தைக்கு நேரடி பொருள் அழிப்பவன் என்பதாகும்.  சிருஷ்டியின் முடிவில் பிராளயம் என்ற சம்ஹாரம் வருவது இயற்கை.  அந்த சம்ஹார மூர்த்தியாகவும் முருகன் இருப்பதனால் அவனிடம் சிவத்தன்மையும் இருக்கிறது.  கடைசியாக உள்ள எழுத்து கு வாகும்.  கு என்றால் படைத்தல் எனப்படும்.  அதனால் முருகன் பிரம்மனாகவும் இருக்கிறான்.

படிப்பவனை கெடுக்காதே...!

புண்ணியம் இது வென்று உலகம் சொன்னால் அந்தப்புண்ணியம் கண்ணனுக்கே என்று பகவத் கீதையின் வாசகமாக கண்ணதாசன் அவர்கள் பாடியுள்ளார் இதன் உண்மை அர்த்தம் என்னவென்றால் மனிதனிடமிருந்து கடவுள் மகிழ்வுடன் எதிர்நோக்குவது புண்ணிய செயல்களை மட்டுமே!  கடவுளே எதிர்நோக்கக் கூடிய புண்ணியங்கள் என்னென்ன வென்று சிலர் கேட்கலாம் சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட அவைகளை கிழே காணலாம்


  •  உண்மையான பக்தியோடு துளசி வளர்த்தால் எண்ணத்தாலும், செயலாலும் உருவான பாவங்கள் விலக
  • நல்ல மரங்கள் வளர்த்தால் இகத்திலும், பரத்திலும் சுகமுடன் வாழலாம்
  • சுமங்கலிகளை அன்னை பராசக்தியாக நினைத்து பாத பூஜை செய்தால் சௌபாக்கியம் ஏற்படும். 
  • ஏரி, குளம், கிணறு இவைகளை வெட்டுவித்தால் அல்லது வெட்டுவதற்கு உதவி செய்தால் அல்லது வெட்டியவற்றை பாதுகாத்தால் முன்னோர் சாபம் விலகும்.
  • இறைவன் வாழும் ஆலயத்தை பெருக்கி, மெழுகி கோலமிட்டால் அவன் திருவீதி உலாவரும் பகுதிகளை சுத்தம் செய்தால் சொர்க்கத்தில் அடையும் சந்தோஷத்தை பூமியிலேயே பெறலாம்.

  • வயதானவர்கள், ஊனமுற்றவர்கள், ஆதரவில்லாதவர்கள், இயலாதவர் ஆகியோர்களுக்கு முடிந்த உதவியை செய்தால் மரணபயம் விலகும்.
  • படிப்பவனை கெடுக்காதிருத்தல், படிக்க முடியாதவனை படிக்க வைத்தல், படிக்க உதவுபவனுக்கு ஒத்தாசை செய்தல் போன்றவை வருங்கால தலைமுறையினரை வாழ வைக்கும்.புண்ணியங்களாகும்

   இத்தகைய புண்ணிய வரிசையில் எனது சொந்த அபிப்பிராயமாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன் அதாவது பக்கத்து வீட்டுக்காரனுக்குத் தொண்டு செய்யவில்லை என்றாலும் தொந்தரவு செய்யாதிருத்தல்

Wednesday, December 14, 2011

பூஜையின் போது கோயில் மற்றும் வீடுகளில் மணியடிப்பது ஏன்?

பூஜையின் போது மணியோசை முக்கிய பங்குவகுக்கிறது. பூஜை முன்னால் மணி அடித்தால், அந்த மணி சப்தம் அசுரர், அரக்கர்கள் போன்ற கொடியவர்களை விரட்டியடித்து தேவர்களையும், தேவ கணத்தினரையும் அழைக்கவே பூஜையின் போது மணியடிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். நிருத்தம், வாத்தியம், கீதம் இந்த மூன்றில் மணியோசைக்கும் ஓர் இடம் உண்டு. சங்கு, மணி, சேமக்கலம் இம்மூன்றுமே கடவுள் வழிபாட்டிற்கான சிறந்த சாதனங்களாக இன்றளவும் விளங்குகின்றன. மணி சத்தம் கேட்கும் இடங்களில் தீய சக்திகள் நெருங்காது என்பது நம்பிக்கை.

Tuesday, December 13, 2011

தினசரி ஒரு முட்டை உடல் ‘ஸ்லிம்’ ஆகும்

லண்டன் : தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் ‘ஸ்லிம்’ ஆகலாம் என்கிறது ஆராய்ச்சி முடிவு. இதுபற்றி இங்கிலாந்தின் சர்ரே பல்கலைக்கழக உடலியல் பேராசிரியர்கள் நடத்திய ஆராய்ச்சியில் வெளியான தகவல் வருமாறு:  காலை எழுந்ததும் காலியான வயிற்றில் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால் நாள் முழுவதும் சாப்பிடக்கூடிய உணவுகளின் அதிக கலோரிகளை கட்டுப்படுத்தலாம்.

கலோரிகளை கட்டுப்பாட்டில் வைக்கும் திறன் முட்டையில் இருக்கிறது. எனவே, காலை உணவுடன் முட்டை சேர்த்துக் கொண்டால் மதிய உணவு, இரவு டின்னர் மற்றும் இடையே சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆகியவற்றால் சேரும் கலோரிகள் தடுக்கப்படும். காலை உணவில் முட்டை சேர்ப்பவர்களுக்கு மதிய உணவை அதிகம் சாப்பிடும் உணர்வு ஏற்படாது. இதனால், எடை மற்றும் தொப்பை கட்டுப்பாட்டில் இருக்கும் என்கிறது ஆராய்ச்சி முடிவு.

Thursday, December 8, 2011

உயிர்கள் வாழ வாய்ப்புள்ள கிரகம் கண்டுபிடிப்பு!

பூமியை போன்றே, உயிர்கள் வாழக்கூடிய வாய்ப்புள்ள கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். பூமிக்கு, 600 ஒளிவருட தொலைவில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள இந்த கிரகத்திற்கு கெப்ளர் -22B என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒரு ஒளிவருடம் என்பது சுமார் 10 ட்ரில்லியன்  கிலோமீட்டர் தூரத்திற்கு சமமானது.

தண்ணீர் உட்பட உயிரினங்கள் வாழ தேவையான சூழ்நிலை, இந்த கிரகத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகம், சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூமி உள்ள சூரிய மண்டலம் தவிர விண்வெளியில், உயிரினங்கள் வசிக்ககூடிய கிரகம் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், கெப்ளர் தொலைநோக்கி மூலம் விண்வெளியை ஆராயத் தொடங்கியது. இந்தத் தொலைநோக்கி மூலமே, தற்போது இந்த புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நன்கு தெரியும் 10ம் தேதி 51 நிமிட முழு சந்திர கிரகணம்

கொல்கத்தா : வரும் 10ம் தேதி ஏற்படும் முழு சந்திர கிரகணத்தை இந்தியாவில் நன்கு பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, எம்.பி.பிர்லா வானவியல் மைய இயக்குனர் டி.பி.துயாரி கூறிய விவரம்: இந்த ஆண்டில் 2வது முறையாக டிசம்பர் 10ம் தேதி முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
கடந்த முறை போல் இல்லாமல், இந்த முறை சந்திர கிரகணத்தை கொல்கத்தா உட்பட நாட்டின் பெரும்பகுதியில்  பார்க்கும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. 10ம் தேதி மாலை 6.15க்கு தொடங்கும் கிரகணம், இரவு 9.48 மணிக்கு நீங்கும்.

மேலும், முழு சந்திர கிரகணம் சரியாக 7.36க்கு தொடங்கி 8.28 மணி வரை 51 நிமிடம் நீடிக்கும். ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் கிரகணத்தை நன்கு பார்க்க முடியும். ஆனால், தென் அமெரிக்கா அல்லது அன்டார்டிகாவில் தெரியாது. ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்காவில்  கிரகணத்தின் தொடக்கத்தை காண முடியாது.

இந்த ஆண்டின் ஜூன் 15ல் ஏற்பட்ட முதல் சந்திர கிரகணத்தை, மேக மூட்டம் காரணமாக இந்தியாவின் சில பகுதிகளில் பார்க்க முடியவில்லை. ஆனால், தற்போது 2வதாக ஏற்பட இருக்கும் கிரகணத்தை நன்கு பார்க்க முடியும் என நம்பலாம். மேலும், அடுத்து 7 ஆண்டுகள் கழித்து 2018ம் ஆண்டு ஜூலை 27ல் ஏற்படும் முழு சந்திர கிரகணத்தைதான் இந்தியாவில் பார்க்க முடியும். அதே ஆண்டு ஜனவரி 31ல் ஏற்படும் கிரகணத்தை பார்க்க முடியாது.

இவ்வாறு துயாரி தெரிவித்தார். பிலிப்பைன்சில் சூரியன் மறைந்து சற்று நேரத்தில் ஆசியா, ஆஸ்திரேலியாவில் தோன்றும் சந்திர கிரகணம், கிழக்கு ஐரோப்பாவுக்கு நேரே உதயமாகி வட அமெரிக்காவின் வட மேற்கிற்கு நேரே படும். பாதிக்கும் மேற்பட்ட நாடுகளில் இக்கிரகணத்தை பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Friday, December 2, 2011

உலகின் முதல் ‘செக்ஸ்’ ஸ்கூல் ஆஸ்திரியாவில் தொடக்கம்

வியன்னா : ‘காதல் கீதல் செய்யாதே, படிப்பு பாழாகி எதிர்காலமே நாசமாகி விடும்’ என்று எச்சரிப்பது எல்லாம் நம்நாட்டில்தான். ஆனால், காதல் + பாலியல் கற்று தருகிறோம் என்று கூறி, உலகின் முதல் செக்ஸ் ஸ்கூலை ஆஸ்திரியாவில் தொடங்கியுள்ளனர். ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரில் இந்த ‘அதிமுக்கிய’ பள்ளிக்கூடத்தை யுவா மரியா தாம்சன் என்ற பெண் தொடங்கியுள்ளார். உலகின் முதலாவது சர்வதேச பாலியல் பள்ளி என்று அதை அவர் கூறுகிறார். சிறந்த காதலர்களாகி பாலியலில் வெற்றி பெறுவது எப்படி என்று கற்றுத் தருவதுதான் அவரது உயர்ந்த(!) நோக்கம்.

16 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் சேரலாம். இருபாலர் பள்ளியான அங்கு மாணவர்கள் தங்கி படிக்க வேண்டும். மற்ற பள்ளிகளை போல் ‘வீட்டு பாடம்’ கூட உண்டு.
பள்ளியிலேயே தங்கியிருப்பதால் அங்கேயே வீட்டு பாடத்தை செய்ய வேண்டும். படிப்பை ‘வெற்றிகரமாக’ முடித்தால் ‘சிறந்த பாலியல் மனிதர்’ சான்றிதழும் உண்டு. படிப்பு கட்டணம் ஸி1.14 லட்சம்.

இதுபற்றி மரியா தாம்சன் கூறுகையில், ‘இந்த படிப்பில் வெறும் புத்தக பாடம் மட்டுமின்றி செயல் வழி கல்வியும் இருக்கிறது. எப்படி சிறந்த காதலராக, வாழ்க்கை துணையாக இருப்பது என்பதுதான் இதன் நோக்கம். பாலியல் பாவனைகள், கட்டியணைக்கும் நுட்பங்கள், உடல் ரீதியான அம்சங்கள் ஆகியவை பற்றி கைமேல் பலனாக இதில் அறியலாம்’ என்றார்.

பள்ளியின் செய்தி தொடர்பாளர் மெலடி கிர்ச் கூறுகையில், ‘இந்த பள்ளி மிகப் பெரிய வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை. இப்போதே பலர் இதில் சேர விண்ணப்பங்களை பெற்றுள்ளனர். ஏராளமானோர் விசாரிக்கின்றனர்’ என்றார்.

Thursday, December 1, 2011

லேப்டாப் பயன்படுத்தினால் விந்தணு செயல்திறன் பாதிக்கும்

புதுடெல்லி,: கம்பியில்லா இன்டர்நெட் (வை&பி) சேவையை லேப்டாப்பில் பயன்படுத்தும் ஆண்களுக்கு விந்தணுவின் வீரியம் குறையும் என ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது.
அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஒரு ஆய்வுக் குழுவினர், ஆரோக்யமாக உள்ள 29 பேரிடமிருந்து விந்தணுவை சேகரித்து அதை 2 புட்டிகளில் அடைத்தனர். இதில் ஒரு புட்டியை, வை&பி இன்டர்நெட் இணைப்புடன் கூடிய லேப்டாப் அருகில் 4 மணி நேரம் வைத்தனர். மற்றொரு புட்டியை வேறு இடத்தில் வைத்தனர். எனினும், இவ்விரு புட்டிகளும் ஒரே சீரான வெப்பநிலையில் வைக்கப்பட்டது.பின்னர், இருபுட்டிகளில் இருந்த விந்தணுவையும் பரிசோதித்தனர். லேப்டாப் அருகில் வைக்கப்பட்ட புட்டியில் இருந்த விந்தணுவில் 25 சதவீதம் செயல்திறன் (மொட்டிலிட்டி) குறைவாகவும், 9 சதவீதம் டிஎன்ஏ பாதிப்பும் இருந்தது தெரியவந்தது. அதேநேரம் மற்றொரு புட்டியில் இருந்த விந்தணுவில் 14 சதவீதம் செயல்திறன் குறைவாகவும், 3 சதவீதம் மட்டும் டிஎன்ஏ பாதிப்புடனும் இருந்தது. லேப்டாப்பிலிருந்து வெளியாகும் வெப்பத்தால் இந்த பாதிப்பு ஏற்படாது. எனினும் வை&பி பயன்படுத்துவதால் ஏற்படும் மின்காந்த அதிர்வுகளுக்கும், விந்தணு பாதிக்கப்படுவதற்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த ஆய்வு, நடைமுறை வாழ்வுக்கு அப்படியே பொருந்தும் என்பதை உறுதியாகக் கூற முடியாது. எனவே, இதுபற்றி தேவையில்லாமல் கவலைப்படத் தேவையில்லை என நிபுணர்கள் கூறியுள்ளனர்.