பாம்புகளுக்கு
காதுகள் இல்லை என்பது தெரியும். ஆனால் அவை ஒலியை நன்கு கேட்கும் திறனை
கொண்டிருக்கிறது என்று அமெரிக்க மற்றும் ஜெர்மனி விஞ்ஞானிகள்
கண்டறிந்துள்ளனர். கடல்சார் தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து,
வெளிப்புறத்தில் செவிமடல்களும் உட்புறத்தில் செவிப்பறையும் இல்லாத
பாம்புகள் எப்படி ஒலியை உணர்கின்றன என்பதை முதன்முறையாக விளக்கியுள்ளனர்.
பாம்புகளில் எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. இன்னும் நாம் அறிந்து கொள்ள
வேண்டியதும் ஏராளமாக உள்ளன, என்று வாஷ்பர்ன் பல்கலைக்கழக உயிரியல் துறை
பேராசிரியர் புரூஸ் தெரிவித்துள்ளார். வாசனையை நுகர்தல், சுவை உணர்ச்சி,
வெப்பம் ஆகிய உணர்ச்சிகளால் மட்டுமே பாம்பு வாழ்க்கை நடத்துகிறது என்று
கருதினார்கள். ஆனால், 1970களில்தான் பாம்பால் ஒலியை உணரமுடியும் என்று
கண்டறிந்தார்கள். ஒலி எப்படி பாம்பால் உணரப்படுகிறது என்பது இன்றுவரை
விளக்கப்படவில்லை. அதைத்தான் தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந் துள்ளனர்.
தரையில் நடமாடும் விலங்கினங்கள் ஏற்படுத்தும் ஒலி அதிர்வுகள் பாம்பின்
கீழ்த்தாடையில் அமைந்துள்ள உருளையான ஓர் அமைப்பில் அதிர்வுகளை
ஏற்படுத்துகின்றன. தண்ணீரில் மிதக்கும் கப்பல் எப்படி அலைகளுக்கு ஏற்ப
அசைகிறதோ அது போல் இந்த உருளையான அமைப்பு ஒலி அதிர்வுகளுக்கு ஏற்ப
அசைகிறது.
இதனால்தான் மண்ணுக்குள் புதைந்துள்ள பாம்புகள் கூட அதிர்வுகள் மூலம்
எளிதில் நடமாட்டத்தை அறிந்து கொள்கின்றன. பாம்புக்கு செவிப்பறை இல்லாத
போதும், செவிச்சுருள் பகுதி உள்ளது. அதிர்வுகள் இப்பகுதியில்
உணரப்பட்டவுடன் அது, நரம்புகள் மூலம் மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
மகுடி ஒலிக்கு பாம்பு ஆடாது. மகுடியை ஆட்டுவதாலும், பாம்பாட்டி கால்களை
அசைப்பதாலும்தான் பாம்பு ஆடுகிறது என்று கருதப்படுகிறது. ஆனால் பாம்பால்
மகுடியின் சத்தத்தை உணர்ந்து கொள்ள முடியும் என்பதே தற்போது விஞ்ஞானிகளின்
கண்டுபிடிப்பு உணர்த்துகிறது. பாம்பின் கீழ்த்தாடை ஒரே எலும்பாக இல்லாமல்
இரு எலும்புகளால் ஆனது. இதனால்தான் அது எலியைக்கூட விழுங்கிவிடுகிறது.
உணவுக்கு மட்டும் பயன்படுவதாக கருதப்பட்ட பாம்பின் தாடைப்பகுதி தற்போது
ஒலி உணரப்படும் கருவியாகவும் உள்ளது என்ற இந்த கண்டுபிடிப்புதான்,
நீர்வாழ்வன பரிணாமம் பெற்று தரைப்பகுதியில் வாழத் துவங்கிய போது, எப்படி
ஒலி உணர்ந்தன என்பதற்கு விடையாக அமைந்துள்ளது என்று விஞ்ஞானிகள்
ஆச்சரியப்படுகின்றனர்.
|
Tuesday, August 14, 2012
மகுடி சத்தம் பாம்புக்கு கேட்குமா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment