Thursday, April 26, 2012

பிள்ளையார் வழிபாடு

மருமகனுக்கு தோப்புகரணம் போட்ட பெருமாள் !

,
இந்து மத வரலாற்று தொடர் 25

    பிள்ளையார் வழிபாடு என்பது இன்று நேற்று உருவானது அல்ல கல்பகோடி காலமாக மக்கள் மத்தியில் நின்று நிலைத்து தொடர்ந்து வரும் வழிபாடுகளில் மிகவும் முக்கியமானது கணபதி வழிபாடாகும். எங்கெல்லாம் ஆலமரம், அரசமரம், வன்னிமரம், வேப்பமரம், ஆற்றங்கரை, குளக்கரை, முச்சந்தி, மலை, சந்து, நாற்சந்தி, வீட்டு மாடங்கள் ஊர் கோடி இருக்கிறதோ அங்கெல்லாம் ஒரு பிள்ளையார் கனஜோராக வீற்றிருப்பார். 

எண்ணில் அடங்காத விநாயகர் இருப்பது போலவே அவரது திருவுருவமும் எண்ணில் அடங்காத பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. காலத்திற்கு ஏற்றவாறு மக்கள் கையில் மிக சுலபமாக எந்த பொருள் கிடைக்கிறதோ அதை கொண்டு பிள்ளையாரின் திருமேனியை சமைத்து விடலாம். களிமண், பசும்சானம், பசு வெண்ணெய், பனைவெல்லம், மஞ்சள், கருங்கல், உலோகங்கள், வெள்ளை சலவைகள், அத்திமரம், வெள்ளருக்கன் வேர் ஆகியவற்றால் பெருவாரியான விநாயகர் உருவங்கள் செய்யப்படுகின்றன.



இதில் விழாவிற்கு ஏற்ற பொருளும் பயன்படுத்த படுகிறது உதாரணமாக பிள்ளையார் சதுர்த்தி நாளில் யாரும் சந்தனத்தாலோ, மஞ்சளாலோ பிள்ளையார் பிடிப்பது கிடையாது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து இந்துக்கள் வீடுகளிலும். ஆலயங்களிலும் அன்று களிமண் கொண்டே பிள்ளையாரின் திருவுருவம் செய்யப்படுகிறது, அதே போலவே நமது தமிழ் நாட்டில் பொங்கல் திருநாள் அன்று பிள்ளையார் பசுசானத்தில் மட்டுமே செய்யப்படுவார். இது தவிர பண்டிகை மற்றும் விஷேச விரத தினங்களில் மஞ்சள் பிள்ளையாரே வழிபாட்டில் வைக்கப்படுகிறார்.

பொதுவாக கருங்கல் பிள்ளையாரை யாரும் வீட்டில் வைத்து அதிகமாக வழிபாடு நடத்துவது கிடையாது. கருங்கல் மற்றும் உலோகங்களில் செய்யப்படும் பிள்ளையார் ஆலயங்களிலேயே ஸ்தாபிக்க படுகிறார்கள். இது தவிர விஷேசமான பொருட்களாலும் பிள்ளையாரின் உருவங்கள் உருவாக்கபடுகின்றது ஒருவகை நுரையால் உருவாக்கப்பட்ட வெள்ளை வாரணர் சிலை கும்பகோணத்தில் உள்ள திருவலஞ்சுழி ஆலயத்தில் மக்கள் வழிபாட்டிற்கு வைக்கபட்டிருக்கிறது.



இப்படி பல பொருட்களாலும் விநாயகர் திருமேனிகள் செதுக்க பட்டாலும் மிக சிரேஷ்டமான விநாயகர் திருவுருவம் என்பது வெள்ளருக்கன் வேரில் உருவாக்கப்பட்டதே என்று பல ஞானிகளும் அனுபூதிமான்களும் சொல்கிறார்கள். குறிப்பாக வெள்ளருக்கன் விநாயகரின் தெய்வ நல ஆற்றலை அகத்திய மாமுனிகள் புகழ்ந்து பேசுவதை குறிப்பிட வேண்டும். இன்று விநாயகர் சதுர்த்தி விழா வந்து விட்டால் தெருவுக்கு தெரு அவர் உருவத்தை வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்த படுகின்றன அப்படி வழிபாட்டிற்கு ஏற்ற விநாயகர் உருவத்தை சில செயற்கை இழைகள் கொண்டு தயாரிக்கிறார்கள். குறிப்பாக சொல்வது என்றால் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கொண்டு செய்யப்படும் விநாயகர் உருவங்களே அதிகம் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த பொருளை கொண்டு விநாயகர் உருவங்களை செய்வது சாஸ்திர விரோதமான செயலாகும். களிமண் மற்றும் செம்மண்ணை பயன்படுத்தியே பெரிய விநாயகர் உருவங்கள் செய்ய வேண்டும்.

இலக்கிய உலகில் கவி அசுரர் என்று புகழப்படும் கச்சியப்ப முன்னிவர் தாம் இயற்றிய தணிகை புராணத்தில் விநாயகரின் திருகோலத்தை மிக அற்புதமான கவி நயத்துடன் விளக்குகிறார். விநாயகரின் ஐந்து கரங்களில் ஒன்று மோதகம் ஏந்தியும் மற்றொன்று தீர்த்த கலசம் ஏந்தியும் வேறொன்று தந்தத்தை ஏந்தியும் மற்ற இருகைகளில் அங்குசமும் பாசமும் தரித்து காணப்படுவது ஏன் என்ற விளக்கத்தை நமக்கு தருகிறார். 



சுவை மிகுந்த மோதகம் ஏந்திய கரத்தை தனக்காகவும் தந்தம் ஏந்திய கரம் தேவர்களை பாதுகாப்பதற்காகவும் தீர்த்த கலசம் ஏந்திய கரம் அம்மையப்பனாகிய உமா மகேஸ்வரனை வழிபடுவதற்காகவும் பயன்படுத்துகிறார். இத்தகைய தெய்வ காரியங்களுக்கு ஒரு கையை மட்டுமே பயன்படுத்தும் கணபதி தன்னை வழிபடும். பக்தர்களுக்காக அங்குசம் பாசமுடைய இருகைகளையும் பயன்படுத்துகிறார் என்பது கச்சியப்ப முனிவரின் அழகிய கவிதை வாக்காகும். 

விநாயக பெருமானின் திருவிளையாடல்கள் ஆயிரக்கணக்கில் உண்டு என்று அவரை பற்றி புகழ்கின்ற புராணங்கள் பறையறிவிக்கின்றன குறிப்பாக கஜமுகா சூரனை வதைத்து முனிவர்களை காத்த விதத்தையும் திரிபுர சம்ஹாரத்தின் போது சிவ பெருமானின் ரத அச்சை ஒடித்த விதத்தையும் வியாச பகவான் சொல்ல சொல்ல மகாபாரதம் முழுவதையும் மேரு மலை சரிவுகளில் ஒற்றை கொம்பால் எழுதியதையும் வள்ளி திருமணத்தின் போது யானை வடிவாக வந்து முருக பெருமானுக்கு உதவி புரிந்ததையும் ஒளவை பாட்டியாரின் பக்திக்கு மெச்சி அவரை ஒரே மூச்சில் கைலாசத்தில் கொண்டு சேர்த்ததையும் அகத்திய முனிவர் கமடலத்தை கவிழ்த்து காவேரி நீர் பெருக்கெடுக்க செய்ததையும் எவராலும் மறக்கவும் முடியாது. மறைக்கவும் முடியாது. 



இதுமட்டுமல்ல நாயன்மார்கள் அருளிசெய்த தேவார திருமறைகள் மறைந்து கிடந்த போது அவற்றை மீட்டெடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நம்மியாண்டார் நம்பிகளுக்கு பல வகையில் வினயாகர் புரிந்த அருளும் உதவியும் சரித்திர புகழ் வாய்ந்தவைகள் இது தவிர ஏராளமான அருள் லீலைகளை விநாயகர் அன்றும் செய்துள்ளார் இன்றும் பலரின் வாழ்க்கையில் செய்து வருகிறார். அவரது அருள் விலாசத்தை எழுதிக்கொண்டே போவது என்றால் எழுதவும் சலிக்காது படிக்கவும் சலிக்காது.

அவருடைய லீலைகள் மட்டுமல்ல அவருக்கென்று சிறப்பாக இருக்கும் வழிபாட்டு முறைகள் கூட சலிப்பு ஊட்டாத சோர்வடைய செய்யாத வழிமுறைகளாகும். மற்ற எந்த தெய்வத்திற்கும் இல்லாத சிறப்பு வழிபாடு ஒன்று விநாயகருக்கு உண்டு அதாவது தோப்புகரணம் போடுவது. யாரவது சிவனுக்கோ பெருமாளுக்கோ தோப்புகரணம் போட்டு கேள்வி பட்டிருக்கிறீர்களா? பிள்ளையாருக்கு மட்டும் தான் தோப்புகரணம் போட முடியும். போடவும் வேண்டும். இப்படி தோப்புகரணம் போடுவதற்கு மிக நளினமான புராண பின்னணி இருக்கிறது. 



காக்கும் கடவுளான திருமாலின் திருவிரலில் சுற்றி சுழன்று கொண்டிருக்கும் சுதர்சன சக்கரத்தை நாம் அறிவோம். அந்த சக்கரத்தை ஒருமுறை திருமாலின் தங்கை மகனாகிய விநாயகர் தூக்கி விழுங்கி விட்டாராம் தெரு பிள்ளையாக இருந்தால் தண்டிக்கலாம் தவறை செய்தது மருமக பிள்ளையாச்சே தண்டிக்க முடியுமா? கெஞ்சி கூத்தாடி தான் வாங்க வேண்டும். இதானால் திருமால் எத்தனையோ வேடிக்கை விளையாட்டுகளை பிள்ளையாருக்கு காண்பித்து ஒன்றும் பயன்தராமல் போகவே தோப்புகரணம் போட ஆரம்பித்து விட்டாராம்.

இடது கையால் வலது காதையும் வலது கையால் இடது காதையும் பிடித்து கொண்டு திருமால் உட்கார்ந்து எழுந்த நிலை விநாயகருக்கு வேடிக்கையாக இருந்ததாம். தனது அழகான தொப்பை வயிறு குலுங்க குலுங்க சிரித்தாராம் இதனால் விழுங்கிய சுதர்ச சக்கரம் வெளியே வந்து விழுந்ததாம். இது தான் தோப்பு கரணத்திற்கு சொல்லப்படும் புராண பின்னணியாகும். இந்த கதையில் குழந்தையின் மகிழ்ச்சிக்காக எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் இறங்கி வந்து கூத்தாடினால் கிடைக்கும் சுகமே தனி என்ற அனுபவ விளக்கத்தை பெறுகிறோம்.


பொதுவாக தோர்ப்பி+கரணம் என்பதே தோப்புகரணம் என்று வழக்கு மொழியில் சொல்லப்பட்டு வருகிறது கரணம் என்ற வடமொழி சொல்லுக்கு காது என்பது பொருளாகும் தோர்ப்பி என்றால் கைகளால் பிடித்து கொள்ளுதல் என்பதும் பொருளாகும் அதாவது கைகளால் காதுகளை பிடித்தல் என்பதே தோப்பு கரணம் என்ற வார்த்தையின் அர்த்தமாகும். தோப்புகரணம் போடுவதற்கு நிஜமான காரணம் ஒன்று உண்டு இந்து மத வழிபாடுகளில் உள்ள நடைமுறைகள் அனைத்துமே பல நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டது ஆகும். மிக குறிப்பாக உடல் நலத்தையும் மன நலத்தையும் சமூக நலத்தையும் மையமாக வைத்தே இந்து மத சடங்குகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

தோப்புகரணம் போடும் போது காதுகளை இறுக பற்றிக்கொண்டு உட்கார்ந்து எழுகிறோம் இதனால் நமது நரம்புகள் சுருங்கி சோர்வடைந்து போகாமல் இரத்த ஓட்டம் நல்லபடியாக இருக்கும் அளவு சுறுசுறுப்பு அடைகிறது. இதனால் மூளையின் செயல்பாடுகளில் உள்ள கொந்தளிப்புகள் அடங்கி சாத்வீக சிந்தனைகள் ஏற்படுகிறது. இது மனிதனுக்கு மிகவும் அவசியம் என்பதற்காகவே விநாயக வழிபாட்டில் மண்டையில் குட்டி கொண்டு தோப்புகரணம் போடும் முறை நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது.



தோப்புகரணம் மட்டுமல்லாது பிள்ளையார் சுழி என்பதும் கணபதி வழிபாட்டில் உள்ள சிறப்பான அம்சமாகும். சிவ சுழி, விஷ்ணு சுழி, சக்தி சுழி என்று எந்த சுழிகளும் கிடையாது. விநாயகருக்கு மட்டுமே தனிப்பட்ட ரீதியில் பிள்ளையார் சுழி இருப்பது விளையாட்டுக்கு இல்லை அதனுள் அதி அற்புதமான தத்துவம் அடங்கி உள்ளது விநாயகர் என்றாலே அகரம்,உகரம்,மகரம் கலந்த பிரணவ வடிவம் என்று முன்பே அறிந்தோம் விநாயகர் மட்டுமல்ல அவர் சுழியும் பிரணவ வடிவானது தான் மேலும் பிள்ளையார் சுழியில் சகல தெய்வ வழிபாடுகளும் அடங்கி இருக்கிறது. 

பிள்ளையார் சுழியில் உள்ள வட்ட வடிவம் சிவ சக்தி பீடம் என்ற ஆவுடை என்றும் நீண்டும் நிற்கும் கோடு மூல தம்பம் என்னும் சிவலிங்கம் என்றும் சொல்லபடுகிறது. இவற்றை விந்து என்றும் நாதம் என்றும் ஞானிகள் அழைக்கிறார்கள். பிள்ளயார் சுழியில் உள்ள வட்ட வடிவம் மூலாதார பீடம் என்றும் நீள வடிவம் பிரம்ம நாடி எனவும் அது மூல கணபதி நிலையம் என்றும் தத்துவ ஞானிகள் சொல்கிறார்கள். பிள்ளயார் சுழியை பற்றி அது எழுத்துகளின் வித்து எனவும் மவுன குறி என்றும், ஊமை ஒலி என்றும் பல சாஸ்திர நூல்கள் சொல்லுகின்றன. 

பிள்ளையார் சுழி உள்ள முதல் சுழி சிவனையும் அதை சுற்றி மேலே எழுந்து கீழே வரும் குறியீடு விஷ்ணு எனவும் நீளும் பகுதி பிரம்மன் எனவும் சொல்லப்படுகிறது. எனவே கண்களை மூடி ஒரு நிமிடம் தியானித்து போடுகின்ற சிறிய பிள்ளயார் சுழியில் நாத வடிவான பிரணவத்தையும் வணங்க்கிறோம் சிவ சக்தியாகிய அம்மையப்பனையும் வணங்குகிறோம். முத்தொழில் செய்து மூவுலகையும் காக்கும் மும்மூர்த்திகளையும் வணங்குகிறோம்.எனவே விநாயகர் என்ற ஒரே மூர்த்தியில் சகல மூர்த்தியும் அடங்கி விடுகிறது. 




No comments:

Post a Comment